Posted in Life of JESUS

இயேசு வரலாறு 22 : யோவானின் படுகொலை

Image result for John the baptist in jailசிறையிலிருந்த யோவான் இயேசுவின் பணிகளைப் பற்றி கேள்விப்பட்டார். ஆனால் அவர் கேள்விப் படுபவை எல்லாம் அவருக்கு நம்பிக்கையையும் குழப்பத்தையும் ஒரு சேர கொடுத்தன. இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார் என்பதைக் கேள்விப்படுகையில் ஆனந்திப்பார், ஆனால் உடனே அடுத்த தகவல் வரும், இயேசு பாவிகளோடு பந்தியமர்கிறார். போதனைகளை வழங்குகிறார் என்று ஆனந்தப்படுவார் கூடவே ஓய்வு நாளை அனுசரிப்பதில்லை, நோன்பு இருப்பதில்லை என்று தகவல்களும் வரும். இதற்கு முன் வந்த எல்லா இறைவாக்கினர்களுமே மக்களுக்குப் போதனைகள் செய்வதுடன் கூடவே நோன்பு, ஓய்வு நாள் போன்ற அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து வந்தார்கள். இயேசு அவற்றைக் கடைபிடிக்கவில்லை என்றால் அவர் இறைவாக்கினராகவோ, மெசியாவாகவோ இருக்க முடியுமா என்னும் சந்தேகம் அவருக்கு. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி நோயாளிகளைக் குணமாக்குவதும், மரித்தவர்களுக்கு உயிர் கொடுப்பதும் ஒரு இறைவாக்கினர் தான் அவர் என்பதை அழுத்தமாய்க் காட்டுகின்றன. ஆனால் இவர் தன்னைப் போல இன்னொரு இறைவாக்கினரா ? இல்லை இவர் இறைமகனா ? என்பதை அறிந்தாக வேண்டும். யோசனையின் முடிவில் சிலரை இயேசுவிடம் அனுப்பி அவரிடமே நேரடியாகக் கேட்டு விட முடிவு செய்தார் யோவான்.

யோவான் அனுப்பியவர்கள் இயேசுவிடம் சென்றார்கள்.

‘இயேசுவே நாங்கள் யோவானின் சீடர்கள். யோவான் எங்களை உங்களிடம் அனுப்பினார். அவர் நீர்தான் இறைவனின் செம்மறி என்றும், மெசியா என்றும் ஊருக்கெல்லாம் சொன்னவர். அவர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறார். சிறையில் அவருடைய மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், எனவே மெசியா வந்துவிட்டாரா என்பதை அவர் அறிந்து கொள்ள ஆசிக்கிறார்’ சொன்னார்கள் வந்தவர்கள்.

‘நீங்கள் பார்ப்பதையெல்லாம் யோவானிடம் சொல்லுங்கள். பார்வையிழந்தவர் பார்க்கின்றனர், முடவர்கள் நடக்கின்றனர், தொழுநோயாளிகள் சுகமாகின்றார்கள், கேட்கும் திறன் இழந்தவர்கள் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிர்க்கிறார்கள். இது மட்டுமல்ல எளியவர்களுக்கு நற்செய்தியும் அறிவிக்கப் படுகிறது’ இயேசு வந்தவர்களிடம் சொன்னார். இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்தினர் நடப்பதை எல்லாம் புரியாத மனநிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு கூட்டத்தினரைப் பார்த்து,’ பெண்களில் பிறந்தவர்களில் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் இல்லை. ஆனால் கடவுளின் அரசில் மிகச் சிறியவராய் உள்ளவர் கூட யோவானை விடப் பெரியவரே. குறைகூறும் கூட்டம் குறை கூறிக்கொண்டே இருக்கும். அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். யோவான் நோன்பு இருந்தார், பாலை நிலங்களில் போதித்தார் அவரை பைத்தியக்காரன் என்றும் பேய்பிடித்தவன் என்றும் சொன்னார்கள். நான் உண்டு குடிக்கிறேன் என்றால் போஜனப் பிரியன் என்கிறார்கள். எது செய்தாலும் சிலருக்குப் பிடிப்பதில்லை’ என்றார்.

கூடவே… இது எப்படி இருக்கிறதென்றால், ‘ நாங்கள் குழலூதினோம் நீங்கள் ஆடவில்லை, நாங்கள் பாடினோம் நீங்கள் ஆடவில்லை’ என்று அழுகின்ற குழந்தைகளைப் போலிருக்கிறது. உங்கள் உள்ளத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையே பின்பற்றுங்கள். போலித் தலைவர்கள் எதையும் எதிர்ப்பவர்கள். அவர்களை பின்பற்றாதீர்கள்.’ என்று இயேசு தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தார்.

சிறையிலிருந்த யோவானுக்கு செய்தி சென்று சேர்ந்தது. அவர் மகிழ்ந்தார். தான் சுட்டிக்காட்டிய மனிதர் ஒரு இறைமனிதராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு நம்பிக்கை மிகுந்தது.

இதற்கிடையில் ஏரோதியாளின் விரோதம் அதிகரித்துக் கொண்டே வந்தது. யோவான் ஏரோதை எச்சரித்ததிலிருந்தே மக்களிடம் ஏரோது செய்வது தவறு என்னும் பேச்சு உலவி வந்தது. அதை ஏரோதியாள் விரும்பவில்லை. எப்படியேனும் யோவானை வைத்து தான் சொன்னது தவறு என்றும், ஏரோது செய்வது தவறில்லை என்றும் சொல்ல வைக்க விரும்பினாள். பலமுறை ஏரோது மன்னன் தூதனுப்பியும் யோவான் வளைந்து கொடுக்கவில்லை. தனக்கு முன்னால் மரணம் தான் விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தாலும் யோவான் அசரவில்லை. தவறு எப்போதுமே சரியாவதில்லை என்பதில் அவர் நேராக நின்றார். எனவே எப்படியேனும் யோவானைத் தீர்த்துக் கட்டுவது என்ற ஏரோதியாளின் முடிவு வலுவடைந்து கொண்டே வந்தது. சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தவளுக்கு வந்தது அந்த அற்புதமான வாய்ப்பு !

Image result for John the baptist killed
வாய்ப்பு ஏரோது மன்னனின் பிறந்தநாள் விழா மூலம் வந்தது !

ஏரோது மன்னனின் பிறந்தநாள் விழா. மன்னன் உயர் அதிகாரிகளையும், படைத் தளபதிகளையும், நாட்டின் மரியாதைக்குரிய தலைவர்களையும் அழைத்து ஒரு மிகப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தான். விழா கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. எங்கும் பணக்காரத் தனம் பளிச்சிட்ட அவை. உண்பதற்கும், குடிப்பதற்கும் தனித் தனி இடங்கள். மெலிதாகக் கசியும் மெல்லிசை. அரச வாசனை வழியும் நடைபாதைகள். எங்கும் வண்ண வண்ணப் பட்டாடை அலங்காரத் தொங்கல்கள்.

அந்த விழாவின் தனிச்சிறப்பாக ஏரோதியாளின் மகளின் நடனம் அமைந்தது. அவள் ஏரோதியாளுக்கும், அவளுடைய முதல் கணவன் பிலிப்பிற்கும் பிறந்தவளாக இருக்கக் கூடும். அவளுடைய பெயர் சலோமி. வயதுக்கு மீறிய கவர்ச்சியும், அழகும் நிறைந்த அவளுடைய ஆட்டத்தில் மன்னர்களும், விருந்தினர்களும் லயித்துப் போய் கிடந்தார்கள். அவளுடைய பார்வையில் மிதந்த காந்தக் கவர்ச்சியில் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருமே மெய்மறந்தனர்.

ஆடல் முடிந்ததும், ஏரோது மன்னன் ஆனந்தமாய் எழுந்தான்.

‘ஆஹா… பிரமாதம் பிரமாதம்… மிகவும் அற்புதமாக நடனமாடினாய். என்னுடைய பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்புடையதாக்கினாய். உனக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள். அரசில் பாதியைக் கேட்டால் கூட நிச்சயமாய்த் தருவேன்’ உற்சாகமாய்ச் சொன்னான் மன்னன்.

அரசில் பாதி கூட தர தயாரா ? என்னுடைய நடனத்துக்கு அத்தனை மதிப்பா ? அந்த இளம் பெண் ஆனந்தித்தாள். பரவசத்தில் பறந்தாள்.

‘அரசே. என் தாயிடம் சென்று ஆலோசித்து வர அனுமதி வழங்குங்கள்’ அவள் கேட்டாள்.

ஏரோது மன்னன் ஒப்புக் கொண்டான். அவள் நேராக தன்னுடைய தாயிடம் சென்று ‘அம்மா.. என்னுடைய நடனம் மிகவும் சிறப்பானதாக இருந்ததாம். மன்னர் எனக்கு என்ன வேண்டுமோ தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். நான் என்ன கேட்கட்டும்’ என்று உற்சாகமாகக் கேட்டாள்.

தாயின் மனதுக்குள் குடிகொண்டிருந்த குரூர குணம் தலைநீட்டியது.

‘மகளே நீ மன்னனிடம் சென்று ஒரு தங்கத் தட்டில் யோவானின் தலையைத் தரவேண்டும் என்று கேள்’ என்றாள் தாய்.

அவள் திகைத்தாள். என்னம்மா ? யோவானின் தலையா ? எத்தனையோ மதிப்பு மிக்க பரிசுப் பொருட்கள் இருக்க இதைப் போய் கேட்கிறீர்களே ? வேறு ஏதேனும் கேளுங்கள். அரசில் பாதியைத் தரக் கூட அரசர் தயார். மகள் சொல்ல தாய் சிரித்தாள். யோவானின் தலை நான் இரவு பகலாக விரும்புவது. அதையே கேள் என்று சொல்லியனுப்பினாள்.

மகள் பதில் ஏதும் பேசவில்லை. நேராக மன்னனிடம் சென்றாள்.

‘என்ன ? தாயிடம் கலந்தாலோசித்து விட்டாயா ? என்ன வேண்டும் கேள். என்னிடம் இருப்பதில் சிறந்தவற்றைக் கேள்’ மன்னன் சொன்னான்.

‘மன்னா, யோவானின் தலையை வெட்டி ஒரு தங்கத் தட்டில் வைத்து எனக்குத் தரவேண்டும்’ சிறுமி தாய் விரும்பியதைக் கேட்டாள்.

எரோது மன்னன் திடுக்கிட்டான். விழாவில் இருந்த அத்தனை பேரும் திடுக்கிட்டார்கள்.

‘சிறுமியே ? இ…இது தான் நீ விரும்பியதா ?’ ஏரோது மன்னன் தடுமாறினான்.

‘ஆம் அரசே… எனக்கு அது போதும்’ சிறுமி சொன்னாள்.

ஏரோது மன்னன் மிகவும் கவலையடைந்தான். ஆனாலும் இத்தனை மக்கள் முன்னிலையில் தான் கொடுத்த வாக்குறுதியை மீறவும் அவன் விரும்பவில்லை. சொன்ன சொல்லைக் காப்பாற்றாத மன்னன் என்னும் பெயரைப் பெற அவன் விரும்பவில்லை. கூட்டத்தினர் அனைவரும் ஏரோது மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் காணும் ஆவலில் இருந்தார்கள். மன்னன் சுற்றிலும் பார்த்தான், இருந்தவர்கள் அனைவரும் பெரும் புள்ளிகள். அவர்கள் மத்தியில் வாக்குறுதி நிறைவேற்றத் தவறிய கரும்புள்ளியாக மாற அவன் விரும்பவில்லை. அவனுடைய நிலமை ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போல, யோவானைக் கொன்றால் மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டி வரும். கொல்லாவிடில் தலைவர்கள் முன்னிலையில் அவமானப் பட நேரிடும். கர்வத்தை எப்படி விட்டுத் தருவது ?

‘யோவானின் தலையைக் கொய்து வாருங்கள்’ நடுங்கும் குரலில் மன்னன் ஆணையிட்டான்.

சேவகர்கள் சென்று சிறையிலிருந்த யோவானிடம் சென்றார்கள்.

‘ஐயா… உமது தலையை வெட்ட வேண்டும் என்னும் மன்னனின் உத்தரவோடு வந்திருக்கிறோம்’ சேவகர்கள் சொன்னார்கள்.

‘கடவுளில் ஒன்றித்திருப்பவனுக்கு சாவு என்பது வெகுமானம் தான், அவமானம் அல்ல… ஆணையை நிறைவேற்றுங்கள்’ யோவான் சலனமில்லாமல் பதில் சொன்னார்.

அவர்கள் அவருடைய தலையை வெட்டி, ஒரு தங்கத் தட்டில் வைத்து அதை ஏரோதியாளின் மகளிடம் கொடுத்தார்கள். அவள் அதை தன்னுடைய நடுங்கும் கரங்களினால் வாங்கி ஏரோதியாளின் காலடியில் வைத்தாள். தரையில் சில துளி இரத்தங்கள் சிதறின. ஏரோதியாளின் முகத்தில் எதையோ சாதித்த நிம்மதி படர்ந்தது.

யோவான் இறைவாக்கினர் படுகொலை செய்யப்பட்ட செய்தி ஊருக்குள் பரவ அவருடைய ஆதரவாளர்கள் பெரும் துயருற்றனர். அவர்கள் அரண்மனைக்கு வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தார்கள்.

2 thoughts on “இயேசு வரலாறு 22 : யோவானின் படுகொலை

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...