Posted in Life of JESUS

இயேசு வரலாறு 21 : நயீன் விதவையின் மகன்

 Image result for Son of Nain widow Jesus
நயீன் ஊரை இயேசு நெருங்கினார். அவருடன் ஏராளமான மக்கள் கூடவே சென்றார்கள்.

நயீன் ஊர் வாசலில் ஒரு மரண ஊர்வலம் அவர்களை எதிர்கொண்டது. அழுகையும், ஒப்பாரியுமாய் அவர்களை நெருங்கியது அந்த ஊர்வலம்.

இறந்து போனவன் ஒரு இளைஞன். அவனுடைய தாய்க்கு அவன் ஒரே மகன். அவள் ஒரு கைம்பெண். ஊர்வலம் இயேசுவின் அருகே வந்தது.

இயேசு நின்றார். அந்தத் தாயைப்பார்த்தார். ஆதரவற்ற நிலையில், அனாதைபோல அழுது புலம்பிக் கொண்டிருந்த அவளுடைய நிலை அவருடைய மனதைத் தொட்டது.

‘அழாதீர்கள் அம்மா..’ இயேசு சொன்னார்.

‘ஐயா… எனக்கு இருந்த ஒரே ஆதரவும் இப்படிப் போய்விட்டதே. அன்பு மகன் இறந்து போனால் அழாமல் இருக்க முடியுமா ? எனக்கு இனிமேல் யாருமே இல்லையே ? என்ன செய்வேன்…’ அந்தத் தாய் கதறினாள்.

இயேசு பாடையைத் தொட்டார். பாடையைத் தூக்கி வந்தவர்கள் நின்றார்கள்.

‘இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு’ இயேசு சொன்னார்.

கூட்டத்தினர் ஒரு வினாடி திகைத்தனர். மறு வினாடி ஆச்சரியத்தில் திளைத்தனர்.

இறந்து கிடந்த அந்த இளைஞன் எழுந்திருந்தான். பாடையைத் தூக்கி வந்தவர்கள் பாடையை நழுவவிட்டார்கள். இளைஞன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அழுது அழுது கண்கள் வீங்கிப் போன தாயை பலமடங்கு பாசத்துடன் அள்ளி அணைத்துக் கொண்டான்.

கூட்டத்தினருக்கு அதிர்ச்சி. ‘உண்மையிலேயே ஒரு மாபெரும் இறைவாக்கினர் நம்மிடையே வந்திருக்கிறார்’ என்று அவர்களுடைய உதடுகள் ஓயாமல் பேசத் துவங்கின.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...