Posted in Life of JESUS

இயேசுவின் வரலாறு 20 : ஒரு வார்த்தை போதும்

Image result for Centurion's faith Jesusபரிசேயர்களின் அச்சுறுத்தல் இயேசுவைப் பணி செய்வதிலிருந்து இம்மியளவும் பாதை மாற்றவில்லை.

கப்பர்நாகும் என்னும் ஊரில் படைத்தளபதி ஒருவர் இருந்தார். அவருக்குக் கீழே நூறு வீரர்கள் இருந்ததால் அவர் நூற்றுவர் தலைவர் என்று அழைக்கப் பட்டார். அந்நாட்களில் நூறுபேர், ஐம்பது பேர், பத்து பேர், ஆயிரம் பேர் என்று பல அளவுகளில் படைகள் இருந்தன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு படைத்தளபதியின் கீழ் செயலாற்றி வந்தன. படைவீரர்களின் எண்ணிக்கையை வைத்து குழுக்கள் பெயரிட்டு அழைக்கப் பட்டன.

இந்த தலைவன் தன்னுடைய படைவீரர்களை மிகவும் நேசித்தான். அவர்களுடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் நல்ல மனத்தினனாக இருந்தான்.

ஒருமுறை அவனுடைய பணியாளன் ஒருவன் நோயுற்றுச் சாகும் நிலையில் இருந்தான். தன்னுடைய பணியாளனின் நிலையைக் கண்ட தலைவன் மிகவும் மன வருத்தமடைந்தான். அவனை எந்த வழியிலாவது சுகப்படுத்த முடியுமா என்று எல்லா வைத்தியர்களையும், போதகர்களையும் வைத்து முயன்றான். எந்த பயனும் இல்லை. பணியாளன் நாளுக்கு நாள் பலவீனமடைந்து மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

இயேசு மக்களுக்குப் போதனைகள் நிகழ்த்துவதற்காக கப்பர் நகூமுக்கு வந்தார்.

இயேசு வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட நூற்றுவர் தலைவன் மகிழ்ந்தான். இயேசுவைப் பற்றி அவன் மிகவும் நன்றாக அறிந்திருந்தான். இயேசுவின் அற்புதங்களின் மேல் அவர் ஆழமான விசுவாசம் கொண்டிருந்தார். இயேசு நினைத்தால் நிச்சயமாக தன்னுடைய பணியாளனின் நோய் நீங்கி விடும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
அவருக்குள் காய்ந்து போயிருந்த நம்பிக்கை மரம் மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பித்தது.

அவர் யூதப் பெரியவர்கள் சிலரை அழைத்து ‘ஐயா.. நீங்கள் எனக்காக இயேசுவிடம் சென்று என்னுடைய பணியாளனுக்கு நலம் பெற்றுத் தாருங்கள்’ என்று வேண்டினார்.

அந்தப் பெரியவர்கள் நூற்றுவர்த் தலைவனையும் பணியாளர்கள் மேல் அவன் காட்டும் கரிசனையையும் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். யூதர்களுக்கென்று ஒரு தொழுகைக் கூடத்தையும் அவன் அமைத்துக் கொடுத்திருந்தான். எனவே அவர்கள் அந்த நூற்றுவர்த் தலைவன் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்தார்கள்.

அவர்கள் இயேசுவைக் காணச் சென்றார்கள். இயேசு மக்கள் கூட்டத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
‘நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். நம்பிக்கை இல்லாமல் வெறுமனே கேட்டு விட்டு உங்களுக்குத் தோன்றும் வழியில் நடப்பது பயன் தராது. என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்வது முக்கியமல்ல. நான் சொல்வதன் படி நடப்பதே முக்கியம். என்னை நம்பி என்னுடைய போதனைகளின் படி நடப்பவன் பாறையின் மீது தன்னுடைய வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான். பெரும்புயலடித்தது, பெரும் சுழல்காற்று வீசியது. ஆனால் வீடு அசையவில்லை. என்னுடைய வார்த்தையின் படி நடக்காதவனோ, மணலின் மீது வீடு கட்டிய மூடனுக்கு ஒப்பாவான். சிறு புயலுக்கே அது சிதறடிக்கப்பட்டது. எனவே ஆழமான நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நீங்கள் செயல்களில் வெளிப்படுத்த வேண்டும்’ இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தது மக்கள் கூட்டம்.

இயேசு போதனைகளை நிறுத்த்¢யதும், யூத பெரியவர்கள் அவரிடம் சென்றார்கள்.
‘போதகரே வணக்கம்’

இயேசு அவர்கள் பக்கம் திரும்பினார்.

‘இங்கே நூற்றுவர் தலைவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பணியாளன் ஒருவன் சாகும் தருவாயில் இருக்கிறான். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவனுக்குச் சுகம் கிடைக்கவில்லை. நீர் நினைத்தால் அவன் சுகம் பெறுவான் என்பது எங்களின் நம்பிக்கை’ அவர்கள் அமைதியாய்ச் சொன்னார்கள்.

இயேசு பதில் சொல்லவில்லை.

‘அவர் மிகவும் நேர்மையானவர். நமக்காக தொழுகைக் கூடங்கள் எல்லாம் அமைத்துத் தந்தவர். நீங்கள் அவருக்கு உதவ வேண்டும்’ அவர்கள் மீண்டும் பணிவுடன் சொன்னார்கள்.

‘சரி வாருங்கள் அவரிடம் செல்வோம்’ இயேசு அவர்களுடன் அந்த நோயாளியைச் சந்திக்கச் சென்றார்.

இயேசுவும் கூட்டத்தினரும் நூற்றுவர் தலைவரின் வீட்டை நெருங்கினார்கள். இயேசு தன் வீட்டை நோக்கி வந்திருப்பதைக் கண்ட நூற்றுவர்த் தலைவன் பரவசமடைந்தான். அவன் தன் ஊழியக் காரரை அழைத்து நீங்கள் இயேசுவிடம் போய்
‘ஐயா… உமக்குத் தொந்தரவு வேண்டாம். நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும். என்னுடைய ஊழியன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவன் ஆனாலும் எனக்குக் கீழேயும் படை வீரர்கள் உண்டு. ஒருவனைப் பார்த்து போ என்றால் போவான், இன்னொருவனைப் பார்த்து வா என்றால் வருவான், இதைச் செய் என்றால் செய்வான். அதுபோல நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் நோய்கள் எல்லாம் என் பணியாளனை விட்டு விட்டு ஓடிப்போய்விடும்’ என்று சொல்லுங்கள் என்றான்.

ஊழியர்கள் இயேசுவை எதிர்கொண்டு போய் அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.

இயேசு வியந்தார். நூற்றுவர் தலைவனுடைய ஆழமான நம்பிக்கையையும், அறிவையும் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தார். அவர் திரும்பி தன்னைப் பின் தொடர்ந்து வந்த கூட்டத்தினரை நோக்கி

‘பாருங்கள். இதுதான் நம்பிக்கை. நான் இஸ்ரயேலரிடத்தில் கூட இத்தனை ஆழமான நம்பிக்கையைக் கண்டதில்லை. உண்மையாகவே உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கிழக்கிலும், மேற்கிலும் இருந்தெல்லாம் என்னை நம்பும் மக்கள் வந்து விண்ணுலகில் கடவுளோடு அமர்ந்திருப்பார்கள். ஆழமான நம்பிக்கை இல்லாத கடவுளின் மக்களான நீங்கள் புற இருளுக்குள் தள்ளப்படுவீர்கள் ‘ என்றார்.

பின் அந்த ஊழியர்களை நோக்கி,
‘நீங்கள் நிம்மதியுடன் செல்லுங்கள். உங்கள் சக பணியாளனின் நோய் இந்த வினாடியில் விடைபெற்றிருக்கிறது.’ என்றார்.

ஊழியர்கள் வீட்டை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள் வீட்டை அடையும் முன் மரணப்படுக்கையில் கிடந்த ஊழியன் முழு உடல் நலத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

ஊழியர்கள் வியந்தார்கள்.

ஒற்றைச் சொல்லால் நலமடைந்த நண்பனை நண்பர்கள் ஆனந்தமாய்ப் பார்த்தார்கள்.

இயேசு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். பயணம் நயீன் என்னும் பட்டணத்தை நோக்கி நகர்ந்தது.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...