Posted in Life of JESUS

இயேசு வரலாறு 19. பாவிகள் வீட்டில் பரமனா ?

Image result for jesus feast with sinnersஅக்காலத்தில் வரி வசூலிக்கும் ஆயக்காரர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையற்ற முறையில் தான் வரி வசூலித்து வந்தார்கள். எனவே தான் யோவான் கூட வரி வசூலிப்பவர்களுக்கு அறிவுரை செய்யும் போது ‘ அளவுக்கு அதிகமான வரியை வசூலிக்காதீர்கள்’ என்று அறிவுரை வழங்கினார். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துத் தான் வாழ்க்கை நடத்தி வந்தார்கள் இந்த ஆயக்காரர்கள்.

அந்த வரி வசூலிப்பவர்களில் நல்லவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களையும் மக்கள் திருடன் என்றும் தீண்டத் தகாதவன் என்றும் தான் அழைத்தார்கள். ஏனென்றால் அவர்கள் தானே மக்களிடமிருந்து பணத்தை வரியாக வசூலிக்கிறார்கள். எய்தவன் இருக்க அம்பை நோவது போல மக்கள் அவர்களை வெறுத்தனர்.

இயேசு ஒரு நாள் ஆயக்காரர்கள் வரி வசூலிக்கும் சுங்கச் சாவடி வழியாகச் சென்றார். அங்கே ஒரு மனிதர் அமர்ந்து வரி வசூலித்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் லேவி. அல்பேயு என்பவருடைய மகன். கிரேக்கம், ரோமன் உட்பட பல்வேறு மொழிகளில் நல்ல பரிச்சயம் உடையவர் லேவி. ரோமர்களின் பணமான பென்ஸ், பவுண்ட்ஸ், தாலந்துகள் எனப்படும் வெள்ளி மற்றும் தங்கத்திலான நாணயங்கள் அவருடைய கைகளில் புரண்டு கொண்டிருந்தன. அவற்றை கவனமாக வசூலித்துக் கொண்டிருந்தார்.

இயேசு அவரைப் பார்த்தார். அவருடைய கண்களில் சோகம் இழையோடிக்கொண்டிருந்தது.

‘என்னைப் பின்பற்றி வா’ அவனுக்கு அழைப்பு விடுத்தார். ஒரே ஒரு வார்த்தை. லேவியை நேருக்கு நேராய் பார்த்து அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு நடந்தார் இயேசு.

லேவி யோசிக்கவில்லை. உடனே தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து இயேசுவின் பின்னே சென்றான். ! என்ன நடக்கும் என்பதை யோசிக்கவில்லை, என்ன செய்யப் போகிறோம் என்று யோசிக்கவில்லை, வரி வசூலிக்காமல் சென்றால் அரசு தரப்பிலிருந்து என்ன சிக்கல்கள் வரும் என்பதை யோசிக்கவில்லை. இயேசுவின் பின்னே நடந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் புரியாமல் விழித்தனர். எத்தனையோ வருடமாக வரி வசூல் செய்து கொண்டிருக்கும் ஒருவன், இயேசு வந்து என்னைப் பின்செல் என்றவுடன் பணத்தைக் கூட அங்கேயே விட்டு விட்டு அவரோடு செல்கிறானே என்று ஆச்சரியமடைந்தார்கள்.

இயேசு அவரைப் பார்த்தார். இனிமேல் நீ என் நண்பன். உன் பெயர் இனிமேல் மத்தேயு என்றார்.

மத்தேயு, இயேசுவின் ஐந்து சீடர்களுடன் சேர, சீடர்களின் எண்ணிக்கை ஆறானது. வரி வசூலிப்பவராக இருந்து மக்களிடமிருந்து ஓரமாய் ஒதுக்கப்பட்டிருந்த தனக்கு இயேசுவின் அங்கீகாரமும், கூடவே ஐந்து நண்பர்களும் கிடைத்ததில் மத்தேயு மகிழ்ந்தார்.

‘இயேசுவே… என்னையும் ஒரு பொருட்டாக மதித்து உமது சீடனாக்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என் வீட்டில் நான் இன்று உமக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்கிறேன். வந்து உணவருந்தவேண்டும்.’ என்று இயேசுவுக்கு அழைப்பும் விடுத்தார்

இயேசு அவனுடைய அழைப்பை ஏற்று விருந்துக்குச் சென்றார். வீடு ஆயக்காரர்களாலும், பாவிகள் என்று பிறரால் அழைக்கப்பட்ட மனிதர்களாலும் நிறைந்திருந்தது. இயேசுவும் அவருடைய சீடர்களும் மனிதருக்குள் பாகுபாடு காட்டும் வழக்கம் இல்லாதவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்.
இயேசுவின் இருபுறமும் அவர்கள் தான் அமர்ந்திருந்தார்கள்.

இயேசு அனைவருடனும் நேசத்துடன் உரையாடி, அவர்கள் பரிமாறிய உணவைப் பகிர்ந்து உண்டு கொண்டிருந்தார்.

குற்றம் சொல்லும் கூட்டம் சீடர்களை அழைத்துக் கேட்டது.

‘ஏன் உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் உணவருந்துகிறார் ? பாவிகளோடு பாவிகளும், ஆயக்காரரோடு ஆயக்காரரும் விருந்துண்பது தானே முறை ?’ கேள்வியில் எள்ளல் இருந்தது. இயேசுவின் காதுகளில் தாங்கள் கேட்பது விழவேண்டும் என்பதற்காக சற்று உரக்கவே கேட்டார்கள்.

இயேசு அவர்களுடைய குரலில் தெறித்த ஏளனத்தை அறிந்து கொண்டார். ஆனாலும் புன்னகையுடன் பதில் சொன்னார்.
‘மருத்துவன் நோயற்றவர்க்கல்ல, நோயுற்றவருக்கே தேவை. நான் பலியை விரும்பவில்லை, இரக்கத்தையே நாடுகிறேன். நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்’ என்றார்.

குற்றம் சொன்னவர்கள் குறுகுறுத்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

இயேசுவும் சீடர்களும் நன்றாக விருந்துண்டு இயல்பாக இருப்பதைக் கண்ட திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கும் குழப்பம். திருமுழுக்கு யோவானுக்கே குழப்பம் வந்திருக்க வேண்டும். இவர் தான் மீட்பர் என்று அறிவித்தவர் அவர். இயேசுவோ உண்டு குடித்து திரிகிறார். நோன்பு இருக்கும் வழக்கத்தைக் கொள்வதில்லை.

யூதர்களுக்கு நோன்பு என்பது மிகவும் முக்கியமானது. நோன்பு நாட்களில் உண்ணாமல் இருப்பது வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவே கலைந்த தலையுடனும் சோர்வடைந்த முகத்துடனும் அலைவார்கள். இயேசுவும் அவருடைய சீடர்களும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுற்றி வந்தார்கள்.

திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.
‘நாங்கள் நோன்பு முறைகளையெல்லாம் கடைபிடிக்கிறோம். அது தான் கடவுளுக்கு ஏற்புடையது என்பதை சட்ட நூல்களே சொல்கின்றன. நீரும் உம்முடைய சீடர்களுமோவென்றால் எப்போதுமே நோன்பு இருப்பதில்லையே ? ஏன்’

இயேசு அவர்களைப் பார்த்து ,’ மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவருடைய நண்பர்கள் நோன்பு இருக்க வேண்டிய தேவையில்லை. மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும் அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்’ என்றார்.

அவர்களுக்கு அவருடைய விளக்கம் புரியவில்லை. ஆனாலும் அவ்விடம் விட்டு அகன்றனர்.

ஓய்வு நாள் ஓய்வெடுக்கவா ?

எருசலேம் தேவாலய உளவாளிகளுக்கு இப்போது சில தகவல்கள் கிடைத்துவிட்டது. இயேசு பாவங்களை மன்னிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார், மானிட மகன் என்கிறார், நோன்பைக் கடைபிடிப்பதில்லை, பாவிகளோடு உண்கிறார் குடிக்கிறார். வேறு என்ன கிடைக்கும் என்று அவர்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்தது மேலும் ஒரு துருப்புச் சீட்டு.

அது ஒரு ஓய்வு நாள். இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வெளி வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். வயலில் தானியங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன. இயேசு அடுத்துள்ள ஊரில் போதனையை முடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். உணவருந்தி நீண்ட நேரம் ஆகியிருந்ததால் சீடர்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் அந்தக் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கி ஊதி தானிய மணிகளை உண்டார்கள். கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி இயேசுவின் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது.

இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாளில் வேலை செய்கிறார்கள் !

அவர்கள் இயேசுவை அணுகினார்கள்.
‘பாரும் இயேசுவே பாரும். இன்றைக்கு ஓய்வு நாள். உங்கள் சீடர்கள் செய்வது என்ன என்பது உங்களுக்குத் தெரிகிறதா ?’ பரிசேயர்கள் கேட்டார்கள். இயேசு பார்த்தார். ‘ என்ன செய்கிறார்கள் ? பசியாய் இருப்பதால் சில கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் இதில் என்ன தவறு ?’ இயேசு கேட்டார்.

‘மறை நூலை நீங்கள் வாசித்ததில்லையா ? ஓய்வு நாளில் உணவு சேகரிப்பது கூட பாவம் என்று மோசே சொல்லியிருக்கிறார். உங்கள் சீடர்கள் செய்வது ஒருவகையில் அறுவடை தான். ஓய்வு நாளில் எந்தப் பணியும் செய்யக் கூடாது என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது. நீங்கள் வாசித்ததில்லையோ ?’ பரிசேயர்கள் சற்று அதிகாரத் தோரணையில் சொன்னார்கள்.

‘அதே மறை நூலில் நீங்கள் எல்லோரும் புகழ்ந்து பேசும் தாவீது அரசர் செய்த ஒரு காரியமும் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா ? அவரும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது ஆலயத்தில் குருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய அற்பண அப்பங்களை உண்டார்கள். இதை நீங்கள் வாசித்ததில்லையோ ?’ இயேசு பதிலடி கொடுத்தார். பரிசேயர்கள் மெளனமானார்கள்.

‘அது மட்டுமல்ல. ஓய்வு நாளில் குருக்கள் ஆலயத்தில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறிய செயலாகாது என்பதையும் திருச் சட்ட நூல் சொல்கிறதே ! தெரியாதா ?’ இயேசு மீண்டும் கேட்டார். பரிசேயர்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

‘ஓய்வு நாளில் விருத்த சேதனம் செய்வது கூட பாவமாகாது என்பதாவது தெரியுமா ?’ இயேசுவின் தொடர் கேள்விகளால் அவர்கள் மெளனமானார்கள்.

‘கோயிலை விடப் பெரியவர் இங்கே உங்கள் முன்னால் இருக்கிறார். அதை நீங்கள் அறியவில்லை. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று நான் போதிப்பதன் பொருள் உங்களுக்கு விளங்கும் வரை நீங்கள் இவற்றையெல்லாம் உணரமாட்டீர்கள். கடைசியாக ஒன்று சொல்கிறேன். ஓய்வு நாள் இருப்பது மனிதனுக்காக, மனிதன் இருப்பது ஓய்வு நாளுக்காக அல்ல. கடவுள் ஓய்வு நாளிலும் பணியாற்றுகிறார்’ இயேசு அதிகாரத் தோரணையில் சொல்லி விட்டு நகர்ந்தார்.

குற்றம் சொன்ன கூட்டம் முணுமுணுத்துக் கொண்டே அகன்றது.

இயேசு அங்கிருந்து நேராக தொழுகைக் கூடத்துக்குச் சென்றார். அங்கும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் குற்றம் ஏதேனும் காணவேண்டும் என்னும் நோக்கில் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே தொழுகைக் கூடத்தில் சூம்பிப் போன கைகளை உடைய ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். இன்று ஓய்வு நாளாயிற்றே, இயேசு அவனைக் குணமாக்குவாரா ? ஒரு சண்டைக்குத் தயாராகலாமா ? என்று அவர்களுடைய மனம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் இயேசுவை நோக்கி,
‘ஓய்வு நாளில் ஒருவனைக் குணமாக்குதல் முறையா ?’ என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம்,’ நீங்கள் சொல்லுங்கள். எது முறை ? நன்மை செய்வதா ? தீமை செய்வதா ? உயிரைக் காப்பதா ? அழிப்பதா ? எது முறை ? எதை ஓய்வு நாளில் செய்யலாம் ? சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

அவர்களிடமிருந்து பதில் இல்லை.

இயேசு கை சூம்பிப்போன அந்த மனிதரை அழைத்து அவர்கள் நடுவிலே நிறுத்தினார். அவர் வந்து இயேசுவின் முன்னால் நின்றார். பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து

‘உங்களுடைய ஒரே ஒரு ஆடு ஓய்வு நாளில் பள்ளத்தில் விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? அதைத் தூக்கி விடுவீர்களா ? இல்லை ஓய்வு நாள் முடியுமட்டும் அந்தக் குழியிலேயே கிடக்கட்டும் என்று விட்டு விடுவீர்களா ? தூக்கி விடுவீர்கள் தானே ? ஆட்டுக்கே நன்மை செய்ய நீங்கள் நினைக்கும் போது ஆட்டை விட உயர்ந்த மனிதனுக்கு நன்மை செய்ய நான் நினைக்கக் கூடாதா ?’ இயேசு அவர்களிடம் கேட்டார். அவர்களிடம் பதில் ஏதும் இருக்கவில்லை.
அவர்கள் இயேசுவின் கேள்விகளில் இருக்கும் கூர்மையையும், அவருடைய சட்ட அறிவையும் கண்டு திகைத்துப் போய் பேச்சிழந்து நின்றார்கள்.

‘உன் கையை நீட்டு’ இயேசு கை சூம்பிப் போனவரிடம் சொன்னார்.

அவன் கையை நீட்டினான். கை நேராகிவிட்டது. அவன் மிகவும் ஆனந்தமடைந்து இயேசுவைப் பணிந்து வணங்கினான்.

பரிசேயர்கள் நேராக அரச அதிகாரிகள் சிலருடன் இயேசுவை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்று ஆலோசனை செய்தார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...