Posted in Life of JESUS

இயேசு வரலாறு 18 : குதர்க்கக் கேள்விகள்

 Image result for Pharisees asking ques to Jesus

வாழ்க்கை என்பது மண்ணுலக வாழ்க்கை மட்டும் தான். அதன்பின் உயிர்த்தெழுதல், விண்ணகம் செல்லுதல் போன்றவை எதுவும் இல்லை. மண்ணுலகில் நல்லவர்களாக வாழ்ந்தால் அதன் பலன் மண்ணுலகிலேயே கிடைக்கும் என்று நம்பும் ஒரு கூட்டத்தினர் அந்த காலத்திலும் இருந்தார்கள். அவர்கள் சதுசேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து,

‘போதகரே… ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாமல் இறந்து போனால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து கொண்டு வழிமரபு உருவாக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டங்களில் ஒன்று. அதன்படி ஒருவன் மகப்பேறின்றி இளம் வயதிலேயே இறந்தான். அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் மணந்தான் அவனுக்கும் குழந்தைப்பேறு இல்லை. இப்படியே ஏழு சகோதரர்கள் அவளை மணந்தும் அவளுக்குக் குழந்தைகள் இல்லை. கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்தாள்’ சொல்லிவிட்டு நிறுத்தியவன் இயேசுவைப் பார்த்து

‘இப்போது நான் என்னுடைய கேள்விக்கு வருகிறேன். உயிர்த்தெழுதல் உண்டு என்று நீங்கள் சொல்கிறீர்களே. இந்த எட்டுபேரும் உயிர்த்தெழுந்தபின் அவள் விண்ணுலகில் யாருக்கு மனைவியாய் இருப்பாள் ?’ கொக்கிக் கேள்வி ஒன்றைக் கேட்ட திருப்தியில் அவர் புன்னகைத்தார்.

ஒட்டுமொத்த கூட்டமும் சட்டென்று அமைதியாகி இயேசு சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தது. முதலாமவனுக்குத் தான், கடைசியாய் திருமணம் செய்தவனுக்குத் தான் ? ஒருவேளை எல்லாருக்குமோ ? மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார். ‘ உங்களுக்கு மறைநூலைப் பற்றியும், விண்ணகத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது என்பதை நீங்கள் மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்’ இயேசு சொன்னார்.

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?’ அவர்கள் கேட்டார்கள்.

‘விண்ணகத்தில் பெண் கொள்வதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை. அவர்கள் அங்கே தேவ தூதர்களைப் போல இருப்பார்கள் !’ இயேசு சொல்ல கேள்வி கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

Related image

‘ஒருவர் தம்முடைய மனைவியை ஏதாவது காரணம் காட்டி விலக்கி விடுவது முறையா ?’ இயேசுவை நோக்கி சோதிக்கும் கேள்வி ஒன்றை பரிசேயர்கள் நீட்டினார்கள்.

‘படைப்பின் துவக்கத்திலேயே கடவுள் ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்கள் துணையாக வாழவேண்டுமென்று தான் விரும்பினார். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பதே நல்லது’ இயேசு சொன்னார்.

இதைக் கேட்டதும் பரிசேயர்கள் உள்ளுக்குள் குதூகலித்தார்கள். ஏனென்றால் அவர் சொன்னது மோசேயின் கட்டளை ஒன்றுக்கு மாறானதாக இருந்தது.
‘போதகரே.. நீர் சொல்வது மோசேயின் கட்டளைக்கு எதிராய் இருக்கிறதே. அவர் மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து திருமண பந்தத்தை முறித்து விடலாம் என்று சொல்லியிருக்கிறாரே’ அவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.

‘உங்களுடைய கடின மனதைக் கண்டே மோசே அப்படிச் சொன்னார். ஆதியில் அப்படி இல்லை என்பதை நீங்கள் மறை நூலில் வாசித்ததில்லையா ?
நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். பரத்தைமையில் ஈடுபட்டதைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் தன் மனைவியை விலக்கி விட்டு வேறு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரப் பாவம் செய்கிறான்’ இயேசு தெளிவாய்ச் சொன்னார்.

பரிசேயர்கள் அகன்றார்கள். அப்படியானால் தாங்கள் பாவிகளா என்று பலர் தங்களுக்குள் வருந்தத் துவங்கினர்.

சீடர்கள் இயேசுவிடம் ,’ திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வதே சிறந்தது போலிருக்கிறதே’ என்று கேட்டார்கள்.

‘அப்படியல்ல சிலர் பிறவியிலேயே மணவாழ்வுக்குத் தகுதியில்லாமல் இருப்பார்கள், சிலர் சூழ்நிலைகளினால் அப்படித் தள்ளப்படுவார்கள், வேறு சிலர் விண்ணக வாழ்வுக்கு முதலிடம் அளித்து திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.’ என்றார். சீடர்கள் மெளனமானார்கள்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...