Posted in Life of JESUS

இயேசு வரலாறு 17 : கூரை வழியே திமிர்வாதக் காரன்

Image result for Jesus man sick roof

தொடர்ந்த நீண்ட நாள் பயணத்தின் முடிவில் ஏரியோர நகர்களை எல்லாம் சுற்றி முடித்து இயேசுவும் சீடர்களும் மீண்டும் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இதற்கிடையில் இயேசுவின் புகழ் எருசலேம் தேவாலயம் வரைக்கும் பரவ, அங்கிருந்த குருக்கள் இயேசுவைப் பற்றி விசாரிக்க இரண்டு உளவாளிகளை அனுப்பினார்கள்.

அதற்குள் இயேசுவின் பெருமை பல மடங்கு அதிகரித்திருந்தது. இயேசுவைக் காண கூட்டம் முண்டியடித்தது. இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், மக்களுக்குப் போதிப்பதுமாய் இருந்தார். அந்த கூட்டத்தினரிடையே எருசலேம் தேவாலய உளவாளிகளும் உட்கார்ந்திருந்தார்கள்.

வீட்டு வாசல், சுற்றுப்புறம் எங்கும் மக்கள் திரள். ஏராளமான நோயாளிகள் அந்தக் கூட்டத்தில் வந்திருந்தார்கள். எப்படியாவது இயேசுவின் நோய்தீர்க்கும் கரம் தன் மேல் பட்டால் தம்முடைய வாழ்நாள் கவலை மறைந்து விடுமே என்று அவர்கள் காத்திருந்தார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்கவும், குற்றம் கண்டுபிடிக்கவும் கூட மக்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக பல மறைநூல் அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து நின்றார்கள். அவர்களுடைய எண்ணம் இயேசுவின் பேச்சில் குற்றம் கண்டு பிடிப்பது மட்டுமே.

அந்த ஊரில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனும் இருந்தான். அவனால் நடக்கவும் முடியாது, அசையவும் முடியாது ஏன் பேசக் கூட முடியாது. படுக்கையே உலகமாக வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அவனும் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வரத்தைக் குறித்தும் அறிந்திருந்தான். அவனுடைய மனைவியும் நான்கு மகன்களுமாக அவனைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு கலிலேயா முழுவதும் அலைந்தார்கள். யாருடைய மருத்துவக் கரமும் அவனைக் குணப்படுத்தவில்லை. இயேசு கப்பர்நாகூமில் இருப்பதை அறிந்த அவர்கள் அவரை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு போக முடிவெடுத்தார்கள்.

நான்கு மகன்களும் அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, கண்ணீருடன் மனைவி அவர்களைப் பின் தொடர்ந்தாள். தன்னை இயேசுவிடம் கூட்டிச் சென்றால் சுகம் கிடைக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான். அவர்கள் இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டை அடைந்தார்கள்.

வீட்டை அடைந்த அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ! வீடு மக்கள் கூட்டத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. தனிமனிதனாக வீட்டை நெருங்குவதே இயலாத நிலை. கட்டிலோடு வீட்டுக்குள் நுழைவதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்பது அவர்களுக்கு விளங்கியது. ஆனால் அவர்களுடைய நம்பிக்கையை அவர்கள் தளரவிடவில்லை.

அவர்கள் வீட்டின் பின்புறமாகச் சென்றார்கள். அந்த முடக்குவாதக் காரனைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வீட்டின் கூரையில் ஏறினார்கள். கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கினார்கள். வீட்டுக் கூரை உடையும் சத்தம் கேட்டு இயேசுவும் கூட இருந்தவர்களும் மேலே பார்த்தார்கள். திடுக்கிட்டார்கள். என்ன நடக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவே அவர்களுக்கு சில வினாடிகள் பிடித்தன.

மேலே அந்த நான்குபேரும் அவனை கட்டிலோடு கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு பிரமித்தார். நம்பிக்கை வைக்கும் மனிதனை கைவிடக் கூடாது என்று தீர்மானித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். பின் தனக்கு முன்னால் கட்டிலோடு கீழே இறக்கப்பட்ட அந்த மனிதனை நோக்கி,

‘மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார்.

இயேசு வழக்கமாக குணம்பெறு என்றோ உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது என்றோ தான் சொல்வது வழக்கம். அவர் குணமாக்கும் போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இதுவரை சொன்னதில்லை. இப்போது தான் சொல்கிறார்.

மறைநூல் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள்.
‘இவன் ஏன் இப்படிப் பேசுகிறான். பாவங்களை மன்னிக்க இவன் யார் ? பாவங்களைக் கடவுள் ஒருவர் தான் மன்னிக்க முடியும்’ அவர்கள் மனதில் எரிச்சலடைந்தார்கள். உளவாளிகளுக்கு ஒரு தகவல் கிடைத்து விட்டது. இயேசு தேவ நிந்தனை செய்கிறார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டவர், இவர் பாவங்களை மன்னிப்பதாகக் கூறி தன்னையும் கடவுளைப் போல காட்டிக் கொள்கிறார். இது சாவுக்குரிய பாவம். உளவாளிகள் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்தார்.
‘ஏன் உங்கள் உள்ளங்களில் அப்படி நினைக்கிறீர்கள் ? எழுந்து படுக்கையைத் தூக்கிக் கொண்டு போ என்று இவனிடம் நான் சொல்லியிருக்க முடியும். அது எனக்கு மிகவும் எளிது. ஆனாலும் மானிட மகனுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறேன்’ என்றார்.

மானிட மகன்! இயேசுவின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த மறைநூல் அறிஞர்களுக்கு இன்னும் அதிர்ச்சி. ஏனென்றால் அவர்களுடைய பழைய இறைவாக்கினர்களில் ஒருவரான தானியேல் ‘மானிட மகன் வானத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வருவார்..’ என்று குறிப்பிட்டிருந்தார். இயேசுவின் மானிட மகன் பிரயோகம் இயேசு தன்னை தானியேல் தீர்க்கத் தரிசி சொன்ன கடவுளாகக் காட்டிக் கொள்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது. இதை எப்படியும் எருசலேமுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆலய தலைமைக் குருக்களும் அரசும் இதை அறியவேண்டும் என்று அவர்கள் உள்ளுக்குள் தீர்மானித்தார்கள்.

ஆனால் அப்போது வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதிகாத்தனர். ஏனென்றால் அங்கே இருந்த கூட்டத்தில் ஒருசிலரைத் தவிர அனைவரும் இயேசுவின் ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

இயேசு முடக்குவாதக் காரனிடம் திரும்பி ‘ நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்றார்.

அதுவரை உடல் அசைவில்லாமல் கிடந்த அவனுடைய உடல் மெல்ல அசைந்தது. அவனுடைய உதடுகள் அசைந்தன. அவன் மெல்ல எழுந்தான். கூட்டம் ஸ்தம்பித்தது. அவன் கால்களைத் தரையில் ஊன்றினான். வலுவற்றுக் கிடந்த கால்கள் இப்போது சுயமாக நிற்கின்றன. அவன் இயேசுவை நோக்கி கண்ணீர் மல்க பணிந்தான். அவன் உதடுகள் நன்றி அறிவித்தன. இயேசு புன்னகைத்தார். அவன் அந்த மக்கள் கூட்டத்துக்கு முன்பாகவே தன்னுடைய படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினான். கூரையில் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவருடைய மகன்கள் நான்குபேரும் ஆனந்தத்தில் திளைத்தார்கள். கண்ணீருடன் காத்திருந்த மனைவி உற்சாகத்தில் கத்தினாள்.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் உள்ளுக்குள் வஞ்சத்தை வளர்த்தார்கள். அவர்களுக்கு மனித நேயம் எல்லாம் இரண்டாம் பட்சத்துக்கும் கீழே அகல பாதாளத்தில் இருந்தது. ஆனால் சட்டங்களை மீறுவதும், இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்வதும் அவர்களுடைய பார்வையில் கவனிக்கப் படத் தக்கதாக இருந்தன. அவர்கள் இயேசுவை மாட்ட வழி தேடினார்கள்.

இயேசுவுக்கு எதிராக தங்களுடைய முதல் எதிர்ப்பை பரிசேயர்கள் இங்கே தான் காட்டுகிறார்கள். பரிசேயர்கள் எதைச் செய்தாலும் விளம்பரப்படுத்தியடி செய்வது தான் வழக்கம். செபம் செய்யும்போது நகரத்தின் சந்திப்புகளில் நிற்பதும், தங்களுடைய ஆடைகளில் தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்வதும், சட்டத்தைக் கரைத்துக் குடித்ததாகக் கர்வம் கொள்வதும் பரிசேயர்களின் பரம்பரைப் பழக்கம். இயேசுவின் பாஷையில் சொன்னால் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள் இவர்கள். இயேசுவுக்கு எதிராக தங்களுடைய முதல் சுவடை வைக்கிறார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...