Posted in Life of JESUS

இயேசுவின் வரலாறு 12 : சமாரியப் பெண்

Image result for Samaritan womenசெய்தியை கேள்விப்பட்ட இயேசுவும் அவருடைய ஐந்து சீடர்களும் யூதேயாவை விட்டு கலிலேயாவை நோக்கிப் பயணமானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இயேசு அவர்களை வழக்கமான பாதையில் கூட்டிச் செல்லாமல் சமாரியா வழியாக கூட்டிச் சென்றார் !

சமாரியா ! யூதர்களுக்குப் பிடிக்காத ஒரு ஊர்.
சமாரியர்கள் ! யூதர்களால் வெறுக்கப்படும் இனம்.

இவர்களுக்குள் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மூதாதையர்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான். காலப்போக்கில் வழிபாட்டு இடத்தைப் பிரதானப் படுத்தி யூதர்களும், சமாரியர்களும் பிளவுபடத் துவங்கினார்கள். அந்தப் பிளவு நாளாவட்டத்தில் அதிகரித்து அதிகரித்து இரு பிரிவினருக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை என்றானது. இன்னும் சொல்லப்போனால் சமாரியர்களை யூதர்கள் தாழ்ந்தவர்களாக, பேசத்தகாதவர்களாகப் பார்த்தார்கள்.

யூதர்களும், சமாரியர்களும் ஒரே கடவுளைத் தான் வழிபட்டும் வந்தார்கள். ஆனால் சிற்சில வேறுபாடுகளுடன். சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ என்றழைக்கப்படும் ஐந்து நூல்களை மட்டுமே. யூதர்களின் புனித நூலில் வேறு பல பகுதிகளும் உள்ளன.

யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் கடவுளை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். சமாரியர்களோ கரிசிம் மலையின் மீது கட்டப்பட்டிருந்த ஆலயத்தில் தான் கடவுளை வழிபட்டு வந்தார்கள். அந்த ஆலயம் கி.மு 180 ல் இடிக்கப்பட்டது. ஆனாலும் சமாரியர்கள் வேறு இடங்களை நாடிச் செல்லாமல் அந்த மலையிலேயே கடவுளை வழிபட்டு வந்தனர். எருசலேம் தேவாலயத்தில் வழிபடுவதே சரியான முறை என்று யூதர்களும், கரிசிம் மலையே சரியான இடம் என்று சமாரியர்களும் வாதிட்டு வந்தார்கள். இது தான் யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமிடையே இருந்த மிகப் பெரிய கருத்து வேற்றுமைக்குக் காரணம்.

கலிலேயாவிற்கும், யூதேயாவுக்கும் இடையே தான் இருந்தது இந்த சமாரியா. கலிலேயாவிலிருந்து யூதர்கள் எருசலேம் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்றால் சமாரியா வழியாகச் செல்லலாம். அது தான் நேரடியான பாதை. ஆனால் யூதர்கள் அப்படிச் செல்வது தங்களுக்கு இழுக்கு என்று கருதி சமாரியாவைச் சுற்றிக் கொண்டு சுற்றுப் பாதையில் தான் செல்வார்கள். அந்த அளவுக்கு யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் இடையே வெறுப்பு இருந்து வந்தது.

மற்றபடி சமாரியா செல்வச் செழிப்பான பூமி. கோதுமையும், பிற தானியங்களும் அதிகமாகவே விளையும் பூமி அது. அதன் பள்ளத்தாக்குப் பிரதேசங்கள் எல்லாம் பச்சைப் பசேல் என்று தாவரங்களின் கூடாரங்களாய் தான் இருந்தன. ஆனால் என்ன பயன் ? அங்கே விளையும் பொருட்களை எங்கும் விற்பனை செய்ய முடியாது. அதை எந்த யூதரும் வாங்குவதும் இல்லை, அவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதும் இல்லை. எனவே ஒரு தீவு வாழ்க்கை போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. ரோமர்கள் மட்டுமே அவர்களை ஓரளவு பிரிவினை இல்லாமல் பார்த்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இந்த வேறுபாடுகளையெல்லாம் நன்கு அறிந்திருந்த இயேசு சமாரியாவுக்குள் நுழைந்தார். சீடர்கள் பயந்தார்கள், ஆச்சரியப்பட்டனர்.

‘இயேசுவே… நீர் சமாரியாவுக்குள் நுழைகிறீர்கள். இது யூதர்களுக்கு விரோதமான செயல்.’

‘யூதர்களுக்கு விரோதமா, சமாரியர்களுக்கு விரோதமா என்பதெல்லாம் முக்கியமல்ல. கடவுளுக்கு விரோதமில்லாதவற்றைச் செய்யவேண்டும். வாருங்கள், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் ஒரு பாலம் அமைக்க வேண்டும்’ இயேசு சொன்னார். சீடர்கள் அமைதியாக இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

சமாரியா வழியாக நடந்து கொண்டிருந்த இயேசு அங்கே இருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். அந்தக் கிணறு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரவேல் என்னும் மனிதர் வெட்டிய கிணறு அது. அவருடைய சந்ததியினர் தான் இஸ்ரயேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இயேசு அந்தக் கிணற்றையே தேர்ந்தெடுத்து அங்கே அமர்ந்தார்.

‘நீங்கள் போய்.. உண்பதற்கு ஏதேனும் வாங்கி வாருங்கள்’ சீடர்களைப் பார்த்து இயேசு சொல்ல, சீடர்கள் உணவு வாங்கி வருவதற்காக ஊருக்குள் நுழைந்தார்கள்.

இயேசு கிணற்றை எட்டிப் பார்த்தார். கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. மதியம் மணி பன்னிரண்டு. அப்போது சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காகத் தலையில் குடமும், கையில் கயிறும் சுமந்து கிணற்றை நோக்கி வந்தாள். கிணற்றின் கரையில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் அவரை உற்றுப் பார்த்தார்.

யூதன் !

எப்படி ஒரு யூதன் சமாரியாவுக்குள் நுழைந்து இந்தக் கிணற்றின் கரையில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கென்ன வேலை இங்கே ? இதுவரை பார்த்திராத காட்சியாய் இருக்கிறதே ! அவளுடைய மனதில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுந்தன.

அவள் கிணற்றை நெருங்கினாள். அவளுடைய வருகைக்காகத் தான் இயேசு காத்திருக்கிறார். அவள் மெளனமாக தண்ணீர் மொள்ள ஆரம்பிக்கிறாள்.

‘பெண்ணே… மிகவும் தாகமாய் இருக்கிறது. குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா ?’ இயேசு உரையாடலை ஆரம்பித்தார். அவள் ஏகமாய்த் திடுக்கிட்டாள்.

பேசுகிறாரே. இந்த யூதன் சமாரியப் பெண்ணாகிய தன்னிடம் பேசுகிறாரே. சமாரியர்கள் சாத்தானின் கூடாரங்கள் என்று யூதர்கள் கூவுவதை பல முறை கேட்டிருக்கிறாள் அவள். சமாரியர்களிடமிருந்து உணவு வாங்கி உண்பதும் விலக்கப்பட்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதும் ஒன்று என்பது யூதர்களின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று. அப்படி சமாரியர்களை இழிவாகக் கருதி அவர்களைப் புறக்கணிப்பது தானே யூதர்களின் வழக்கம் ! அவளுக்குள் ஆச்சரியம் ஊற்றெடுக்கிறது.

‘ஐயா…. நீர் யூதன். நான் சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களிடம் பேசுவதேயில்லை. நீர் என்னிடம் பேசுகிறீரே ! தண்ணீர் கேட்கிறீரே.’ அவள் வியப்பில் விரிந்த இமைகளைச் சுருக்காமல் கேட்டாள். சமாரியர்களின் ஒட்டு மொத்த உணர்வைப் பிரதிபலிக்கும் வார்த்தை. யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய பள்ளம் இருந்தது என்பதை வரலாற்றுக்குப் புரியவைக்கும் ஒரு வார்த்தை அது.

இயேசு சமாரியப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்தார். ‘ஏன் ? நான் தண்ணீர் கேட்கக் கூடாதா ?’ பழக்கமான நண்பன் உரிமையாய்க் கேட்பது போல பேசினார் இயேசு.

‘அப்படியல்ல. சமாரியர்களிடம் யூதர்கள் பேசுவதில்லை. இது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே என்று தான் கேட்டேன்’

‘அம்மா.. கடவுளின் கொடை என்ன என்பதையும், உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்பதையும் நீ அறிந்திருந்தால் ஒரு வேளை நீயே அவரிடம் தண்ணீரைக் கேட்டிருப்பாய்’ இயேசு சொன்னார்.

‘உம்மிடம் தண்ணீர் கேட்பதா ? நானா ? நல்ல விந்தை ! உம்மிடம் தான் கயிறும் இல்லை , தண்ணீர் மொள்ள பாத்திரமும் இல்லையே. இறங்கித் தண்ணீர் எடுக்கவும் முடியாது. கிணறு மிகவும் ஆழமானது’ அவள் குரலில் கொஞ்சம் நகைப்பைக் கலந்து சொன்னாள்.

‘நான் வாழ்வு தரும் தண்ணீரைத் தந்திருப்பேன். அது கிணற்றிலிருந்து கிடைப்பதல்ல’

‘நீர் ஏதோ புரியாத விஷயங்களைப் பேசுகிறீர். இந்த கிணற்றை வெட்டியவர் யார் தெரியுமா ? இஸ்ரவேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபு ! அவரை விட நீர் பெரியவராய் இருக்க நியாயமில்லையே !’ அவள் புன்னகையுடன் சொன்னாள்.

‘யாக்கோபு வெட்டிய இந்தக் கிணற்றிலிருந்து நீ தண்ணீரைக் குடித்தால் உன் தாகம் தற்காலிகமாகத் தான் நிற்கும். மீண்டும் உனக்குத் தாகம் எடுக்கும். ஆனால் நான் தரும் தண்ணீரைக் குடித்தாலோ உனக்குத் தாகம் என்பதே எடுக்காது’ இயேசுவின் குரலில் தெரிந்த உறுதியும் தெளிவும் அவளை ஆச்சரியப் படுத்திக் குழப்பின.

‘என்னது ? ஒருமுறை குடித்தாலே வாழ்நாள் முழுவதும் தாகம் எடுக்காதா ?’

‘ஆம். அது உள்ளுக்குள் ஒரு ஊற்றாக மாறி நிலை வாழ்வை அளிக்கும்’ இயேசு சொன்னார்.

‘ஐயா.. ஒரு வேளை அப்படி ஒரு தண்ணீர் இருந்தால் அதை எனக்குத் தாருங்களேன். நான் நீண்ட தூரம் நடந்து இங்கே வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாகம் எடுக்காத நீரை நீர் தந்தால் நான் தினமும் இங்கே நடந்து வரவும் தேவையிருக்காது. ஆழமான இந்தக் கிணற்றிலிருந்து கஷ்டப்பட்டு தண்ணீர் இறைக்கவும் தேவையிருக்காது’ அவள் கேட்டாள்.

‘சரி… உனக்கு அந்த வாழ்வளிக்கும் தண்ணீரைத் தருகிறேன்’

‘விரைவாய்த் தாருங்கள்’ அவள் நீர் இறைப்பதை நிறுத்தி விட்டு உற்சாகமானாள்.

‘நீ போய் உன் கணவனைக் கூட்டி வா’ இயேசு சொன்னார்.

‘ஐயா… மன்னிக்க வேண்டும் எனக்குக் கணவன் இல்லை’ அவள் குரலில் சுருதி குறைந்தது.

‘பெண்ணே உண்மையைச் சொன்னதற்காக உன்னைப் பாராட்டுகிறேன்’ இயேசு புன்னகைத்தார்.

‘நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?’

‘உனக்குக் கணவன்கள் ஐந்து பேர் இருந்தார்கள் என்பதும், இப்போது உன்னுடன் இருப்பவன் உன் கணவன் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்’ இயேசு புன்னகை மாறாமல் சொன்னார்.

‘ஐயா……….’ அவளுடைய குரலில் இருந்த நகைப்பு விடைபெற திகைப்பு ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

‘ஐயா… நீங்கள் எல்லாம் அறிந்தவர் போல பேசுகிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக ஒரு பெரிய மனிதராகத் தான் இருக்க வேண்டும். நீர் இறைவாக்கினர் தானே’ அவள் படபடப்புடன் பேசினாள்.

இயேசு புன்னகைத்தார்.

‘ஐயா… உங்களைப் போன்ற ஒரு இறைவாக்கினரைக் காணும்போது கேட்கவேண்டும் என்பதற்காகவே நான் ஒரு கேள்வியை மனதில் வைத்திருக்கிறேன். இதுவரை அந்தக் கேள்விக்கு யாரும் நல்ல பதிலைச் சொல்லவில்லை. உங்களிடம் கேட்கலாமா ?’ அவளுடைய குரலில் எதிர்பார்ப்பு இழையோடியது.

இயேசு தலையசைத்தார்.

‘ஐயா… எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் தான் கடவுளை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களாகிய நீங்களோ எருசலேமில் வழிபடுவதே சிறந்த வழிபாடு என்கிறீர்கள். எங்கே கடவுளை வழிபடவேண்டும். எருசலேமிலா ? அல்லது இந்த மலையிலா ? சொல்லுங்கள்’ அவள் தன் மனதில் நீண்ட காலமாகப் பொத்தி வைத்திருந்த கேள்வியை இயேசுவின் முன்னால் வைத்தாள்.

‘அம்மா.. உண்மையைச் சொல்கிறேன். காலம் வருகிறது. அப்போது நீங்கள் கடவுளை இந்த மலையிலோ, எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள் !’

‘புரியவில்லையே !’ அவள் குழம்பினாள்.

‘மலைக்குச் சென்று வழிபடுவதோ, ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதோ அல்ல உண்மை வழிபாடு. உள்ளத்தில் வழிபட வேண்டும். அது தான் தந்தையின் இயல்பு’ இயேசு விளக்கினார். இந்தப் பதிலை அவள் இதுவரை கேட்டதேயில்லை. அவள் பிரமித்தாள்.

‘உண்மை இயல்பு என்றீர்களே அது என்ன ?’

‘கடவுள் உருவமற்றவர். அது தான் அவருடைய உண்மை இயல்பு. உருவம் இல்லாத ஒருவரை வழிபட ஏன் நீங்கள் மலைக்கும், ஆலயத்துக்கும் அலைய வேண்டும். உருவமற்றவரை, உருவமற்ற உள்ளத்தில் வழிபடுவதே சிறந்த வழிபாட்டு முறை !’ இயேசு சொன்னதைக் கேட்கக் கேட்க அவளுடைய மனதுக்குள் சொல்ல முடியாத தெளிவு வந்து நிறைந்தது.

‘ஐயா.. நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது. நாங்கள் கிறிஸ்து என்னும் மீட்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அவர் வரும்போது எங்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துரைப்பார்’ அவள் அமைதியாய்ச் சொல்ல, இயேசு தெளிவான குரலில் சொன்னார்.

‘நானே அவர் ! நம்பு. ‘

‘நானே அவர்’ என்று இயேசு சொன்னதைக் கேட்டதும் அந்தப் பெண் குடத்தையும் கயிறையும் அங்கேயே விட்டு விட்டு நகருக்குள் ஓடினாள். நகரிலுள்ள மக்கள் அவள் ஓடிவருவதை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

‘நான் மெசியாவைக் கண்டேன்.. கிறிஸ்துவைக் கண்டேன்… ‘ அவள் மூச்சிரைக்கச் சொன்னாள். கேட்டவர்கள் குழம்பினார்கள்.

‘கிறிஸ்துவைக் கண்டாயா ? என்ன உளறுகிறாய் ? அதற்குரிய அடையாளங்கள் எதுவும் நிகழவில்லையே…’ மக்கள் சொன்னார்கள். மெசியா வரும்போது இயற்கையில் மாபெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கைகளில் ஒன்று.

‘வந்து பாருங்கள் அவரை. அவர் தான் கிறிஸ்து. அவருக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருக்கிறது. தெளிவாகப் பேசுகிறார். நான் இதுவரை இப்படி ஒரு பேச்சைக் கேட்டதேயில்லை’ அவள் படபடத்தாள்.

‘எங்கே அவர்’

‘நம் தந்தை யாக்கோபின் கிணற்றின் அருகே நிற்கிறார்.’

அவர்கள் கிணற்றை நோக்கி ஓடினார்கள். அதற்குள் இயேசுவின் சீடர்களும் கிணற்றை வந்தடைந்தனர். இயேசு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் தூரத்திலிருந்தே கண்டனர். ஆனாலும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

‘போதகரே.. உணவு வாங்கி வந்துள்ளோம்… உண்ணுங்கள்’

‘எனக்குரிய உணவு இதுவல்ல’ இயேசு சொல்ல அவர்கள் குழம்பினார்கள்.

‘இந்த உணவைத்தானே நாம் இதுவரை உண்டு வருகிறோம் ? வேறு ஏதாவது வாங்க வேண்டுமா ?’

‘என்னுடைய தந்தையாகிய கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் எனக்குப் பிடித்தமான உணவு. அதைத் தான் நான் உண்டு கொண்டிருக்கிறேன்’ இயேசு சொல்ல சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. விதைப்பவன் ஒருவன். அறுப்பவன் வேறொருவன். அறுப்பவன் கூலி பெறுகிறான். விதைப்பவன் விளைச்சலின் பயனைப் பெறுகிறான். இப்படி, விதைப்பவனும், அறுப்பவனும் ஒருசேர பயனடைகிறார்கள். நீங்கள் உழைத்துப் பயிரிடவில்லை. உங்களை நான் அறுவடைக்கு ஆயத்தப் படுத்தினேன். எனவே நீங்கள் அந்த உழைப்பின் பயனைப் பெறுகிறீர்கள்’ இயேசு சொல்லச் சொல்ல சீடர்கள் புரிந்தும், புரியாத மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் சமாரியப் பெண் சொன்னதைக் கேட்டு ஓடி வந்த மக்கள் கூட்டம் இயேசுவை முற்றுகையிட்டது.

இயேசு அவர்களிடம் பேசினார். மக்கள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘போதகரே.. நீங்கள் எங்கள் ஊரில் தங்கி எங்களுக்கு இறையரசைப் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும்.’ சமாரியர்களின் வேண்டுதலில் இயேசு மகிழ்ந்தார். முதன் முறையாக அவர்கள் ஒரு யூதரிடம் சகஜமாகப் பழகினார்கள். சமாரியர்கள் இயேசுவை தங்கள் ஊரிலேயே தங்கும் படி வைத்த விண்ணப்பத்தை அவர் தட்டவில்லை. அவர் அப்படி ஒரு வாய்ப்புக்காகத் தானே சமாரியாவைத் தேர்ந்தெடுத்தார். யூதர்கள் நுழைய விரும்பாத சமாரியாவின் தொழுநோயாளர் தெருக்களிலும் இயேசு நடந்து மக்களோடு கலந்துரையாடினார்.

சமாரியர்கள் இயேசுவிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டார்கள். யூதர்கள், சமாரியர்கள் என்னும் பிளவுகள் உட்பட. இயேசு பழைய சட்ட நூல்களையும், அவற்றின் கால கட்டங்களையும் அவை ஏன் அவ்வாறு எழுதப்பட்டன என்பதையும் விளக்கி, புதிய போதனையை அளித்தார். மன்னிப்பு, பொறுமை, பணிவு போன்ற புதிய போதனைகள் சமாரியர்களை வியப்புக்குள் தள்ளின. இதுவரை அவர்களிடம் யாரும் இப்படிப் பேசியது இல்லை. சமாரியர்கள் காலம் காலமாக தங்களுக்குள் தூக்கிச் சுமந்த கேள்விகளை வெளியே கொட்ட, இயேசு அவர்களுக்கு விளக்கங்களைக் கொடுக்க, நாட்கள் இரண்டு ஓடி விட்டிருந்தன.

‘உண்மையிலேயே இவர் மீட்பர் தான்…’ சமாரியர்கள் பேசத் துவங்கினார்கள்.

அனைத்துக்கும் காரணமான அந்தச் சமாரியப் பெண் மகிழ்ந்தாள்.

‘பார்த்தீர்களா ? நான் சொன்னேனே இவர் மீட்பர் தானென்று ! ‘ அவள் பெருமையுடன் மக்களைப் பார்த்துக் கேட்டாள்.

‘பெண்ணே… நீ சொன்னதனால் தான் நாங்கள் இங்கே வந்தோம். ஆனால் நாங்கள் நம்பிக்கை கொண்டது அவருடைய பேச்சைக் கேட்ட பின்பு தான். நீ சொன்னதனால் அல்ல.’ அவர்கள் பதில் சொன்னார்கள்.

இயேசு விரும்பிய ஒரு உறவுப்பாலம் அங்கே அமைக்கப்பட்டது

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...