Posted in Life of JESUS

இயேசு வரலாறு 9 : கானாவூரில் திருமணம்; அதிசயத்தின் ஆரம்பம்

Image result for Wedding in Cana

இயேசு தன்னுடைய புதிய ஐந்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத்தில் இருந்த தன் வீட்டுக்குத் திரும்பினார். இயேசுவையும் அவருடைய புதிய நண்பர்களையும் கண்ட மரியா அவர்களை ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்தாள். மகனை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் ஆனந்தம் அவளுடைய கண்களில் மின்னியது.

‘என்னுடைய தோழியின் மகளுக்குத் திருமணம். அந்த விழாவுக்குச் செல்ல இருக்கிறேன். நீயும் உன் நண்பர்களும் வந்தால் நன்றாக இருக்கும்’ இயேசுவின் தாய் விண்ணப்பித்தாள். இயேசு மறுக்கவில்லை. தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அன்னையுடன் திருமண விழாவுக்குப் புறப்பட்டார்.

திருமணம் கலிலேயாவிலுள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. அது தான் நத்தனியேலின் கிராமம். அவர்கள் அனைவரும் நாசரேத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த கானாவை நோக்கி நடந்தார்கள். இயேசு பொதுவாக இப்படிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவருக்கு சிந்திப்பதிலும், மக்களுடன் உரையாடுவதிலும், செபிப்பதிலும் மட்டுமே ஆர்வம் இருந்தது. ஆனாலும் தாயின் சொல்லை அவர் தட்டுவதில்லை. தாயின் விண்ணப்பத்தை நிராகரிப்பதும் இல்லை. பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் மறைநூல் வல்லுநர்களுடன் ஆர்வமுடன் உரையாடிக் கொண்டிருந்தபோதே அன்னையின் கவலை கண்டு எல்லாவற்றையும் விட்டு விட்டு அன்னையோடு திரும்பியவர் அவர். எனவே திருமணத்துக்கு வர அன்னை அழைத்தபோதும் அதை மறுக்கவில்லை.

திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் ஆடலும் பாடலுமாக திருமண அரங்கையே விழா மேடையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாட்களில் திருமண விழாக்களில் முக்கிய இடம் பிடிப்பது திராட்சை இரசம். அவரவர் வசதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்ப நல்ல திராட்சை ரசத்தை வழங்குவது வழக்கம். இந்த திருமண விழாவிலும் சுவையான திராட்சை இரசம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் ஆர்வமாய் அதை சுவைத்து மகிழ்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென திருமண அரங்கில் சிறு சலசலப்பு.

‘இங்கே.. கொஞ்சம் திராட்சை இரசம் கொண்டு வாருங்கள்…’

‘திராட்சை இரசம் கேட்டேனே கிடைக்கவில்லையே’

ஆங்காங்கே குரல்கள் மெலிதாக எழ ஆரம்பித்தன. வீட்டின் பின் புறத்திலோ பணியாளர்கள் திகைத்துப் போய் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள்.

பணியாளர்கள் நிற்கும் நிலமையைப் பார்த்த இயேசுவின் தாய்க்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. ஆனால் என்ன பிரச்சினை என்பது சரியாக விளங்கவில்லை. எனவே அவர் அவர்களிடம் சென்று
‘என்ன பிரச்சினை ? மக்கள் திராட்சை இரசம் கேட்கிறார்கள். நீங்கள் பரிமாறவில்லையே ! செல்லுங்கள். விருந்தினர்களை உபசரியுங்கள்’ என்றார்.

‘அம்மா. அதில் தான் பிரச்சினையே. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’

‘ஏன் என்னாச்சு ?’

‘அம்மா. திராட்சை இரசம் தீர்ந்து விட்டது !’

‘என்ன திராட்சை இரசம் தீர்ந்து விட்டதா ? திருமண விழா இன்னும் முடியவில்லையே. இரசம் மிகவும் குறைவாகத் தான் இருந்ததா ?’ மரியாளின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

‘இல்லை அம்மா. தேவையான அளவு இரசம் இருந்தது. ஆனால் ஆடலும், பாடலும் இருப்பதால் மக்கள் அதிகமாக திராட்சை இரசம் அருந்துகிறார்கள். அதனால் தான் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இரசம் தீர்ந்து விட்டது. எஜமானருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.’ பணியாளர்கள் குரல் தடுமாறியது.

‘இப்போது என்ன செய்வது ?’ மரியா கவலையுடன் கேட்டாள்.

‘அது தானம்மா எங்களுக்கும் புரியவில்லை. எங்கள் மானம் போய்விடும் போலிருக்கிறது. இப்போது திடீரென சென்று இரசம் வாங்கி வரவும் முடியாது. நாங்கள் வாங்கி வரும் முன் விழா முடிந்து விடும். அவமானமும் நிச்சயம். ‘ பணியாளனின் கண்களில் கண்ணீர்.

அதற்குள் திருமண அரங்கில் பலரும் திராட்சை இரசம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். எங்கும் குரல்கள் ஒலிக்க, பணியாளர்களின் பதட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று மரியா முடிவெடுத்தார். தன் மகன் கடவுளின் வல்லமைபெற்றவன் அவன் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அவர் இயேசுவை அழைத்தார்.

‘அம்மா அழைத்தீர்களா’ இயேசு அமைதியாய்க் கேட்டார்.

‘ஆம்.. மகனே. திருமண விழாவில் ஒரு குறை’. இயேசு தாயின் முகத்தைப் பார்த்தார்.

‘இரசம் தீர்ந்து விட்டது.’

‘அம்மா.. இப்போது இந்த திருமண வீட்டில் ஏதேனும் அதிசயம் செய்து ஆரம்பித்து வைத்தால் அது விடிவதற்குள் ஊரெங்கும் பரவி விடும். அதன்பின் என்னால் சுதந்திரமாக உலவ முடியாது. என்னுடைய பணியை நான் உடனே ஆரம்பித்தாக வேண்டிய கட்டாயம் வந்து விடும். எனக்கு போதகர், மீட்பர் என்னும் முத்திரை விழுந்து விடும். என்னால் தயாரிப்புப் பணியைத் தொடர முடியாது. நான் என்னுடைய பணியை ஆரம்பிக்கும் நாள் என்பது என்னுடைய மரணத்தை நோக்கிய பயணத்தைத் துவங்குவது போல. அம்மா. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை ‘ இயேசு அன்னையின் காதுகளில் கிசுகிசுத்தார்.

‘இக்கட்டான நேரத்தில் உதவுதல் தான் முக்கியம். உன்னுடைய பணி இங்கேயே ஆரம்பிக்கட்டுமே’ மரியா மெல்லிய குரலில் சொன்னார். சொல்லிவிட்டு வேலையாட்களை அழைத்து,

‘வாருங்கள். உங்கள் குறைகளை நாங்கள் அறிகிறோம். இதோ இவர் சொல்வதையெல்லாம் நீங்கள் செய்யுங்கள்’. இயேசுவைக் சுட்டிக் காட்டி மரியா சொன்னாள். இயேசு புன்னகைத்தார். அன்னையின் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லவில்லை.

அவர்கள் இயேசுவை கேள்விப் பார்வை பார்த்தார்கள். இயேசுவின் கைகளில் ஒன்றும் இல்லை. விழாவில் திராட்சை இரசம் இல்லை. இவர்களுடைய வீடும் அருகில் இல்லை. இவர் எப்படி உதவ முடியும் என்ற கேள்வியே அனைவரின் பார்வையிலும். ஆனாலும் ஏதேனும் வழியில் திராட்சை இரசம் கிடைக்குமெனில் அதை விடப் பெரிய சந்தோசம் ஏது ? பணியாளர்கள் இயேசுவின் முகம் பார்த்து நின்றார்கள்.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஆறு கற்சாடிகள் இருந்தன.

‘இதென்ன சாடிகள் ?’ இயேசு கேட்டார்.

‘தூய்மைச் சடங்குகளுக்காக இதை இங்கே வைத்திருக்கிறோம். இப்போது இவற்றில் ஒன்றும் இல்லை’ பணியாளர்கள் சொன்னார்கள்.

‘இதில் எத்தனை குடம் தண்ணீர் பிடிக்கும் ?’

‘ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்’

‘சரி. இந்த ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறையுங்கள்’ இயேசு சொல்ல, பணியாளர்களுக்கு மீண்டும் குழப்பம். ஆனாலும் ‘இவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்’ என்று மரியா சொல்லியிருந்தாரே. பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். மிக விரைவாக ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறைத்தார்கள்.

இயேசு சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின் கைகளை நீட்டி அந்த சாடிகளை ஆசீர்வதித்தார்.

‘சரி.. இப்போது இதைக் கொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்’ இயேசு சொன்னார்.

‘என்ன சொல்கிறீர்கள் ? எங்களுக்குத் தண்ணீருக்குத் தட்டுப் பாடு வரவில்லை. திராட்சை இரசம் தான் தீர்ந்து விட்டது. ‘ பணியாளர்கள் குரலில் எரிச்சலும் வெறுப்பும் வெளிப்பட்டது.

‘அதுதான் இதோ ஆறு கற்சாடிகளில் இருக்கிறதே.’ இயேசு புன்னகைத்தார்.

‘இதுவா… இந்தத் தண்ணீரா ? என்ன விளையாடுகிறீர்களா ? எங்கள் வேதனை உங்களுக்கு விளையாட்டாய் தெரிகிறதா ? ‘ கற்சாடியிலிருந்த தண்ணீரைக் கைகளில் அள்ளியபடி கேட்டான் பணியாளன்.

‘தண்ணீரா இது ?’ இயேசு கேட்டார்.

பணியாளன் கைகளைப் பார்த்தான். அவனுடைய விரல்களில் இடையே திராட்சை இரசம் வழிந்து கொண்டிருந்தது !. திகைத்தான். உள்ளுக்குள் நடுங்கினான். இமைகளை மூடவும் மறந்து வியந்து நின்றான்.

‘இதை மொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொண்டு செல்’ இயேசு சொல்ல, மறு பேச்சு எதையும் பேசாமல் பணியாளன் விரைந்தான்.

‘ஐயா… இ…இதோ திராட்சை இரசம்’

‘தி….திராட்சை இரசமா ? அது தான் தீர்ந்து விட்டதே. எங்கிருந்து கிடைத்தது இது ?’ ஆச்சரியத்துடன் கிசு கிசுப்பாய்க் கேட்டுக் கொண்டே பந்தி மேற்பார்வையாளன் அந்த திராட்சை இரசத்தைச் சுவைத்தான். சுவையில் சொக்கினான்.

‘ஆஹா… அருமையான இரசம்… அருமையான இரசம். எங்கே போய் வாங்கினீர்கள் ? எங்கிருந்து கிடைத்தது ? ‘

‘தண்ணீரிலிருந்து’

‘தண்ணீரிலிருந்தா ? என்ன சொல்கிறாய் ?’ மேற்பார்வையாளர் குழம்பினார்.

‘ஆம். இயேசு என்றொருவர் விருந்துக்கு வந்திருக்கிறார். அவர் தான் தண்ணீரை திராட்சை இரசமாக்கிக் கொடுத்தார்’ பணியாளன் சொல்லிவிட்டு நகர, மேற்பார்வையாளன் மெய்மறந்து நின்றான்.

திராட்சை இரசம் மீண்டும் திருமணப் பந்திக்கு வந்தது.

‘குடியுங்கள் ஐயா… நல்ல திராட்சை இரசம்’ விருந்தினர்களுக்கு இரசம் போதும் போதுமென்னும் அளவுக்குப் பரிமாறப்பட்டது.

‘இதென்ன ? இந்த திராட்சை இரசம் இவ்வளவு சுவையாய் இருக்கிறது ‘

‘ஆஹா… இதுவல்லவா திராட்சை இரசம். திருமணம் வெகு சிறப்பு !’

‘எல்லோரும் நல்ல ரசத்தை முதலில் பரிமாறிவிட்டு, கடைசியில் மோசமானதைப் பரிமாறுவார்கள். ஆனால் இங்கே, இவர்கள் நல்ல இரசத்தைக் கடைசி வரை வைத்திருக்கிறார்கள் பார்த்தாயா ?’

திருமண மண்டபம் களைகட்டியது. அனைவரும் மகிழ்ந்தார்கள்.

இயேசு அமைதியாய் நின்றார். அவருடைய மனதுக்குள் பணிவாழ்வைப்பற்றியும் தான் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் சிந்தனைகள் சுற்றிக் கொண்டிருந்தன. விழா கலகலப்பாய் நடக்க, இயேசு தன்னுடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத் திரும்பினார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...