Posted in Life of JESUS

இயேசு வரலாறு 8 : முதல் சில சீடர்களை அழைத்தல்

Image result for Jesus calling disciples

இயேசுவும் தன்னுடன் இணைந்து கொண்டபின் யோவான் அதிக உற்சாகத்துடன் மக்களுக்குப் போதிக்கத் துவங்கினார். அவர் யோர்தான் நதியில் நின்றுகொண்டு மக்களுக்கு திருமுழுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க அரசு உளவாளிகளை அனுப்பியிருந்தது. ஆனாலும் அவர் துணிச்சலைக் கைவிடவில்லை. தீயவர்களை நோக்கிய எச்சரிக்கையையும் கைவிடவில்லை. அவர் தன்னிடம் வரும் சீடர்களிடம் எல்லாம் ‘இயேசுவே உண்மையான கடவுளின் மகன். அவருடைய வழியில் செல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிக்கத் துவங்கினார்.

இயேசு அப்போதுதான் நாற்பது நாள் செபத்தை முடித்துக் கொண்டும், சோதனைகளை முறித்துக் கொண்டும் வெளிவந்திருந்தார். யோவானுடைய போதனையும், அவருடைய பணியும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் அவர் யோர்தான் நதிக்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தார்.

இயேசுவைக் கண்ட யோவான், ‘இதோ போகிறாரே. இவர்தான் கடவுளின் ஆட்டுக் குட்டி. வானத்திலிருந்து கடவுளின் ஆவி அவர் மேல் இறங்குவதைக் கண்டோமே’ என்று மக்களிடம் உரக்கச் சொன்னார். மக்கள் அனைவரும் இயேசு நடந்து கொண்டிருந்த திசையைப் பார்த்தார்கள். இயேசு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.

அந்திரேயா, யோவான் என்ற இரு மீனவர்கள் திருமுழுக்கு யோவானிடம் சீடர்களாகச் சேரவேண்டும் என்னும் ஆசையில் யோர்தான் நதிக்கரையிலேயே காத்திருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை தர வந்த மீட்பராக திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்த யோவானைப் பார்த்தார்கள்.

யோவான் அவர்களுடைய சிந்தனையையும், எண்ணத்தையும் அறிந்தார். அவர்களிடம், ‘நீங்கள் பின் செல்ல வேண்டியது என்னையல்ல. நீங்கள் தேடும் மீட்பர் நான் அல்ல. நான் மீட்பருக்கான பாதையைச் செம்மைப்படுத்துபவன் அவ்வளவே. செல்லுங்கள். இயேசுவைப் பின் தொடருங்கள்’ என்று அனுப்பி வைத்தார். அவர்களும் யோவானுடைய வார்த்தைகளின் படி இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

அவர்களும் இயேசுவைப் பின் தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். இயேசு நடந்து கொண்டே இருந்தார். அவர்கள் இருவரும் விடாமல் அவரைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசு நின்றார். திரும்பி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். ,

‘ ஏன் ? எதையேனும் தேடி நடக்கிறீர்களா ?’

‘நாங்கள் யோவான் தான் மீட்பர் என்று நினைத்து அவரிடம் சீடர்களாகும் ஆசையில் வந்தோம். அவரோ நீர் தான் உண்மையான கடவுளின் மகன் என்று சொல்லி எங்களை அனுப்பினார். நாங்கள் உம்முடைய சீடர்களாக விரும்புகிறோம். எங்களுடைய மனதில் வலிகளும், கேள்விகளும், இயலாமைகளும் நிறைந்து கிடக்கின்றன. உம்முடைய வருகை தான் எங்களைச் சீர் செய்ய வேண்டும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘என்னைப் பின் தொடர்ந்து என் சீடர்களாக வருவது அவ்வளவு எளிதல்ல..’ இயேசு சொன்னார்.

‘என்ன கடினமானாலும் அதை நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். எத்தனை நேரமானாலும் உம்முடன் செலவிடத் தயாராக இருக்கிறோம்’ அவர்கள் சொல்ல இயேசு மீண்டும் புன்னகைத்தார்

‘என்னுடைய பணிக்கு வருபவன், நேரத்தையல்ல வாழ்க்கையையே தரவேண்டும். தன்னுடைய குடும்பத்தின் மீதான பற்றுதலை முற்றிலுமாக விட்டு விட்டு நற்செய்தியை எங்கும் அறிவிக்க வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடுகையில் எந்தவிதமான சுயநல எண்ணங்களோ, உறவினர்களின் சிந்தனைகளோ எழக் கூடாது. நீங்கள் ஆர்வத்தினால் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், மறுபரிசீலனை செய்யுங்கள். இது இலகுவான பணி அல்ல. இது விரும்பிச் சுமக்கும் பாரம்.’ இயேசு சொன்னார்.

‘நாங்கள் ஆர்வ மிகுதியால் வந்தவர்கள் அல்ல. ஒரு மீட்பரைக் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள். நாங்கள் உம்முடனே வருவோம். நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்பதைச் சொல்லுங்கள்.’ அவர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தார். அவர்களுடைய பார்வையில் மிளிர்ந்த உறுதியைக் கண்டார். ‘ வந்து பாருங்கள் ‘ என்று ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அமைதியாய் நடந்தார். அவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று இயேசு தங்கியிருந்த இடத்துக்கு வந்தார்கள். இயேசு இப்போது தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு தனியே தங்கியிருந்தார். இயேசுவுடன் வந்த இருவரும் அவருடன் அமர்ந்து பேசத் துவங்கினார்கள். இயேசு அவர்களுக்கு தன்னுடைய சிந்தனைகளையும், இறையரசின் தன்மைகளையும், நேர்மையான வழிமுறைகளையும் போதித்தார். போதனை நீண்டு கொண்டே இருந்தது. இயேசுவின் போதனைகளில் இருந்த உறுதியும், கேள்விகளை எதிர்கொள்ளும் அறிவும், தீர்க்கமான சிந்தனைகளும், இழையோடிய மனித நேயமும் அவர்களைக் கட்டிப் போட்டன. அவர்கள் இயேசுவை என்றும் பிரியப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.

‘போதகரே.. நீர் தான் உண்மையான இறைவாக்கினர். இனிமேல் நாங்கள் உம்மை விட்டுப் பிரியப் போவதில்லை. எப்போதும் உம்முடன் தான் இருப்போம்’ என்றார்கள். அந்திரேயா, யோவான் என்னும் அந்த இருவரும் இயேசுவின் முதல் இரு சீடர்களானார்கள்.

தாங்கள் அறிந்த இயேசுவைப்பற்றி தங்கள் சகோதரர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் இருவரும் ஆசைப்பட்டார்கள். அந்திரேயா தன்னுடைய சகோதரன் சீமோனைச் சந்திக்க ஓடினார். இந்த ஆச்சரியச் செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் அவசரம் அவரிடம் தெரிந்தது.

‘சகோதரனே… மெசியாவைக் கண்டோம்.. மீட்பரைக் கண்டோம்’ அவருடைய குரலில் உற்சாகம் பீறிட்டது.

சீமோன் ஆர்வம் காட்டவில்லை.’ நீங்கள் இப்படித்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள். இப்போது திருமுழுக்கு யோவானின் பின்னால் அலைகிறீர்கள். அப்படித்தானே ?’

‘இல்லை. அவர் மீட்பர் இல்லை. இது வேறு ஒரு நபர்’

‘ஓ.. அவரையும் விட்டு விட்டீர்களா ? இப்போது யார் புதிதாய் ?’ சீமோன் சிரித்துக் கொண்டே கேட்டார்.

‘சிரிக்கவேண்டாம் சகோதரனே… உண்மையைத் தான் சொல்கிறேன். நாம் காலங் காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஒரு மெசியா ! ஒரு மீட்பர் ! அவரைத் தான் கண்டோம். கடந்த சில நாட்களாக அவருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரை முழுமையாக அடையாளம் கண்டு கொண்டோம். இனிமேல் சந்தேகமே இல்லை. இது மீட்பர் தான். அவருடைய போதனைகளையும், பதில்களையும் வந்து கேட்டுப் பார் உனக்கே தெரியும்’

‘உளறாதீர்கள். பலர் வந்து இப்படியெல்லாம் பேசி உங்களை ஏமாற்றுவார்கள். எச்சரிக்கையாய் இருங்கள்’ சீமோன் சொன்னார்.

‘இல்லை… இல்லை.. இவர் அப்படியல்ல. எத்தனையோ பேர் பேசினார்கள். எத்தனையோ போதகர்கள் வந்தார்கள். ஏன் யோவான் கூட திருமுழுக்கு கொடுத்து வருகிறார். அவர்களில் யாரையாவது நான் மெசியா என்று சொல்லியிருக்கிறேனா ? போதகர்கள் என்று தானே சொல்லியிருக்கிறேன் ? இவர் உண்மையிலேயே மெசியாதான். வந்து பார்’ அந்திரேயா சகோதரனை சம்மதிக்க வைத்தார்.

சகோதரனின் ஆர்வத்தைக் கண்ட சீமோனுக்கும் இயேசுவைப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது. அவர் இயேசுவிடம் வந்தார். இயேசுவைக் கண்ட சீமோன் ஒரு வினாடி திகைத்தார். இயேசுவின் சாந்தமான முகமும், அவருடைய தீர்க்கமான பார்வையும் அவரைக் கட்டிப் போட்டன. இயேசுவும் சீமோனை உற்றுப் பார்த்தார்.

‘சீமோனே. உன் பெயர் இனிமேல் கேபா ! கேபா என்றால் பாறை என்பது பொருள். நீ பாறையைப் போன்று வலிமையானவன். ‘ என்றார். சீமோன் திகைத்தார். இயேசுவின் வித்தியாசமான அணுகுமுறையும், வரவேற்பும் அவரை வசீகரித்தன. அந்த நிமிடத்திலேயே இயேசுவின் சீடரானார். அவர்கள் ஒரு குழுவானார்கள்.

மறுநாள் அவர்கள் அனைவரும் கலிலேயா செல்லவேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தைத் துவங்கினார்கள். வழியில் பிலிப்பு என்பவரைக் கண்டார். அவர் கப்பர்நாகூமில் பிறந்து தன்னுடைய பெரும்பாலான காலத்தை பெத்சாய்தாவில் செலவிட்டவர். அவரைக் கண்டதும் தன்னுடைய சீடனாகும் தகுதி அவருக்கு இருப்பதை அறிந்த இயேசு அவரைப் பார்த்து ‘என்னைப் பின் தொடர்ந்து வா’ என்றார். பிலிப்பு ஏதும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தார்.

இயேசுவின் வார்த்தைகள் பிலிப்புவையும் கட்டிப் போட்டன. அவரும் இயேசுவின் சீடரானார். இயேசுவின் போதனைகளை ஊரெங்கும் பரப்பவேண்டும் என்று உறுதியும் கொண்டார். அவருக்கு தன்னுடைய நண்பர் நத்தனியேலின் நினைவு வந்தது. நத்தனியேலும் மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருந்தவர். பிலிப்பு பலமைல்கள் தொலைவில் இருந்த தன்னுடைய நண்பர் நத்தானியேலைக் காண விரைந்தார். நத்தனியேல் ஒரு அத்திமரத்தின் அடியில் படுத்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

‘நத்தனியேல், ஒரு ஆனந்தமான செய்தி. நாங்கள் ஒரு மிகச் சிறந்த போதகரைக் கண்டோம். அவர் ஒருவேளை மீட்பராக இருக்கலாம். நம்முடைய சட்டநூல்கள் சொன்ன மெசியாவாக இருக்கலாம். இந்த செய்தியைக் கேட்டு சந்தோசப் படுவாய் என்று எனக்குத் தெரியும் அதனால் தான் உன்னைத் தேடி ஓடி வந்தேன். ‘ பிலிப்பு சொன்னதைக் கேட்ட நத்தனியேல் சட்டென்று எழுந்தார். அவருடைய கண்கள் மின்னின.

‘மெசியாவா ? மிகச்சிறந்த போதகரா ? எங்கே கண்டீர்கள் ? எங்கிருந்து வந்திருக்கிறார் ? சொல்.. சொல்’ நத்தனியேல் அவசரமானார்.

‘அவர் நாசரேத்தில் இருக்கிறார். மரியா, யோசேப்பு என்பவரின் மகன் தான் அவர்’ பிலிப்பு சொன்னதும் நத்தனியேல் பின்வாங்கினார். அவருடைய கண்களில் மின்னிக் கொண்டிருந்த வெளிச்சம் அணைந்தது.

‘நாசரேத்தா ? அங்கிருந்து நல்லது எதுவும் தோன்றாது. நீர் சொல்வது உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை’ நத்தனியேல் சுருதி குறைத்துத் தயங்கினார்.

‘வந்து பாரும். புரிந்து கொள்வீர்.. சந்தேகப் பட வேண்டாம். வந்து பார்த்து அவர் நல்ல போதகரில்லை என்று தோன்றினால் திரும்பி விடு ‘ பிலிப்புவின் குரலில் இருந்த உறுதி நத்தனியேலை இயேசுவிடம் அழைத்து வந்தது.

‘வா. நத்தனியேல். நீ உண்மையிலேயே நல்ல தூய்மையானவன். கபடமற்ற இஸ்ரயேலன்’ இயேசு அவரைப் பார்த்துச் சொன்னார்.

நத்தனியேல் நெற்றி சுருக்கினார். ‘என்னைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் ? பிலிப்பு சொன்னாரா ?’

‘பிலிப்பு உன்னைக் கூப்பிடும் முன், நீ அத்திமரத்தின் அடிவாரத்தில் இருந்தபோதே நான் உன்னைக் கண்டேன்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

நத்தனியேல் வியந்தார். தான் பல மைல் தொலைவில் ஒரு அத்தி மரத்தின் கீழே இருந்ததை இவர் எப்படிக் கண்டார் ? அப்படியானால் இவர் உண்மையிலேயே பெரியவர் தான் நத்தனியேல் வியந்தார்.

இயேசு மீண்டும் புன்னகைத்தார். ‘ உன்னை அத்திமரத்தின் அடியில் பார்த்தேன் என்று சொன்னதற்கா வியப்படைகிறாய். நீ காணப் போகும் அதிசயங்கள் ஏராளம் உள்ளன. ஏன் வானம் திறப்பதையும், கடவுளின் தூதர்கள் இறங்கி என் மீது வருவதையும் கூட நீ காண்பாய்’

இயேசு சொன்னதைக் கேட்ட நத்தனியேல் அந்நேரமே இயேசுவின் சீடரானார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...