Posted in Life of JESUS

இயேசு வரலாறு 5 : இளமையில் இயேசு

Image result for Jesus at age 12

சிறுவயது இயேசு தந்தையின் தச்சுக் கூடத்தில் விளையாடி வளர்ந்தார். தந்தை செய்து தரும் மரவேலைப்பாடுள்ள பொருட்களை வைத்து விளையாடுவதில் மிகுந்த விருப்பம் அவருக்கு. இயல்பிலேயே இயற்கையோடும் பறவைகள் விலங்குகளோடும் மிகவும் அன்பு கொண்டவராக இருந்தார் இயேசு. இயற்கையின் அழகை ரசிப்பதும், அதைக் குறித்த கேள்விகளை எழுப்புவதும், பறவைகளோடு நேசமாய் பேசி விளையாடுவதுமாய் ஆனந்தமாய் இருந்தது அவருடைய மழலைக்காலம்.

தந்தை அவருக்கு இறைவாக்கினர்களின் ஏட்டுச் சுருள்களை வாசித்து விளக்கம் சொல்வதுண்டு. தலை முறைகளின் கதைகளையும், ஆதாம் துவங்கி சில தலைமுறைகளுக்கு முன்பு வரை நடந்த கதைகளையும் தந்தை அவருக்கு விளக்கிச் சொல்ல அதை ஆர்வமாய்க் கேட்டு வளர்ந்தார் இயேசு. குறிப்பாக மோசேயின் கதைகளும், இறைவாக்கினர்களின் பணிகளும், தாவீது மன்னன், சாலமோன் மன்னன் போன்றவர்களுடைய இறை புகழ்ச்சிப் பாடல்கள் இவற்றை அவர் வாசித்து நேசிக்கத் துவங்கினார். திரும்பத் திரும்ப தந்தையிடமிருந்து கதைகள் கேட்டுக் கேட்டு அவை அவருடைய மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது.

அவருடைய அன்பு மிகவும் பரந்து பட்டதாக இருந்தது. அழகிய பறவை முதல், அசிங்கமான பூச்சிகள் வரை எல்லாவற்றையும் ஒரே போல பாவித்தார். தந்தையிடமும், தாயிடமும் காட்டும் அன்பை அனைவரிடமும் காட்டினார். அவருடைய பரந்து பட்ட அன்பைக் கண்ட தந்தை வியந்தார்.

சிறுவயதிலேயே அருகிலிருக்கும் மலைகளுக்குச் சென்று ஏறி விளையாடுவது இயேசுவுக்குப் பிடித்தமானதாக இருத்தது. சிறுவர்களோடு சண்டையிடாமலும், போட்டியிடாமலும் விளையாடுவது அவருடைய பாணியாய் இருந்தது.

வாரத்தின் கடைசி நாளான ஓய்வு நாளில் எந்த வேலையையும் செய்யாமல் இருக்கும் சட்டத்தை யோசேப்பு கடைபிடித்து வந்தார். அவர் அந்த நாளில் எந்த வேலையும் செய்வதில்லை. தச்சு வேலை, தங்கள் கால்நடைகளைக் குளிப்பாட்டுவது போன்ற வேலைகள் மட்டுமல்லாமல், சிறு சிறு வேலைகளான விளக்கை ஏற்றி வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளைக் கூட செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை. யோசேப்பு இயேசுவுக்கும் அவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தார்.

இயேசுவுக்குப் பிடித்தமான இன்னொரு இடம் தொழுகைக் கூடம். அங்குள்ள குருக்களிடம் ஆலோசனைகளும், அறிவுரைகளும் பழைய ஏட்டுச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளுக்கான விளக்கங்களும் இயேசுக்குத் தேவையாக இருந்தது. எனவே எப்போதெல்லாம் கலந்துரையாடல்கள், விளக்கங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் கலந்து கொண்டார். குருக்களுக்குப் பணிவிடைகள் செய்தும் மறைநூல் அறிவை வளர்த்தார். ஆனால் தான் கற்றதையெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ள இயேசுவுக்கு மனம் வரவில்லை. சின்ன வயதிலேயே மறைநூல் அறிஞர்களின் பேச்சுக்கும், நடத்தைக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை உணரும் பக்குவம் வந்திருந்தது. ஏன் என்று கேள்வி எழுப்பும் ஞானம் வந்திருந்தது.

இயேசுவுக்கு பதினோரு வயது நிரம்பியபோது நாட்டில் மிகப்பெரிய கலகம் ஒன்று பிறந்தது. ஆளும் ஏரோது மன்னனுக்கு விரோதமாக யூதாஸ் என்னும் போராளி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் கிளர்ச்சியாளர்கள் வளர்ச்சியடைய ஏரோது விடவில்லை. அவனுடைய குரூரம் விஸ்வரூபமெடுத்து தலைவிரித்தாடியது. கண்களில் கோபத்தின் கடல் கொந்தளித்தது. இரு விழிகளும் எரிமலையாய் தெரிந்தன. ஆணையிட்டான். கிளர்ச்சியாளர்களைச் சிலுவையில் அறைய ஆணையிட்டான். கிளர்ச்சியாளர்கள் பலவந்தமாய் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவருமே அடித்து நொறுக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். சிலுவையில் அறையப்பட்டு !. அப்படிச் செத்தவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம்.

அந்த நிகழ்வு சிறுவன் இயேசுவின் மனதில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் ? கிளர்ச்சி செய்தால் மரணம் நிச்சயமென்றா ? அல்லது ஆளும் அரசுக்கு எதிராக யாரும் வாய்திறக்கக் கூடாது என்றா ? அல்லது ஏதேனும் பய உணர்வுகளையா ? தெரியவில்லை. ஆனால் சிலுவை மரணம் என்பது எப்படிப் பட்டது என்பதை நேரில் கண்டறியும் வாய்ப்பு அவருக்கு பதினோரு வயதிலேயே வாய்த்தது !

இப்படிப்பட்ட அனைத்து விதமான கொடுமைகளிலிருந்தும் தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று மக்கள் அனைவரும் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைப் பயன்படுத்தி பலர் தான் தான் மெசியா என்று சொல்லிக் கொண்டு அவர்களிடம் உரையாற்றுவதும், பின் அவர்கள் போலிகள் என்று தெரியவருவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. இயேசு சிறுவனாக விளையாடிக்கொண்டிருந்த காலத்திலும், திதேயுஸ் என்னும் ஒருவன் தான் தான் கடவுள், மீட்பர் என்று சொல்லித் திரிந்தான். மக்கள் அவனிடம் ஏதேனும் அருங்குறிகள் செய்து காட்டுமாறு விண்ணப்பம் வைத்தனர். அவன் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒலிவமலையில் ஏறி நின்று, எருசலேம் தேவாலயத்தின் சுவர் இடிந்து விழட்டும் என்றார். சுவருக்குக் காது கேட்கவில்லை. அது அப்படியே நின்றது. திதேயுஸின் மீட்பர் பிம்பம் உடைந்தது. இந்த செய்திகளெல்லாம் மக்கள் எந்த அளவுக்கு ஒரு மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதை இயேசுவுக்குப் புரியவைத்தன.

அறிவிலும் ஞானத்திலும் தொடர்ந்து வளந்து வந்த இயேசு பன்னிரண்டு வயதுப் பாலகனானார்.

பாஸ்கா விழாக் காலம்.

இயேசுவின் பன்னிரண்டாவது வயதில் வந்த பாஸ்கா வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும், இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு சிறு முன்னுரை போலவும் அமைந்தது.

பாஸ்கா என்பது யூதர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு விழா. அந்த விழாவிற்காக சுற்றிலுமுள்ள எல்லா ஊர்களிலுமிருந்தும் மக்கள் திரண்டு எருசலேம் தேவாலயத்துக்கு வருவது வழக்கம். அந்நாட்களில் வாகன வசதிகள் ஏதும் இல்லாததால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் கால்நடைகள் மற்றும் தேவையான உணவுப் பொருட்களுடன் எருசலேம் நோக்கி பெரும்பாலும் நடந்தே செல்வார்கள். பெரும் பேரணி போல மக்கள் கூட்டம் செல்வதனால் பயணக் களைப்பிலிருந்தும், கொள்ளையர்களின் தாக்குதல் பயத்திலிருந்தும் தப்பிவிடலாம் என்பது தான் அவர்களின் எண்ணம்.

நாசரேத் ஊர் மக்களும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் எருசலேம் செல்வதென்று முடிவு செய்தார்கள். அதன்படி அவர்கள் பயணத்தையும் துவங்கினார்கள். யோசேப்பு, மரியா, இயேசு மூவரும் அந்தப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இயேசு முதன் முறையாக எருசலேம் தேவாலயத்துக்குச் செல்கிறார்.

பயணம் எருசலேம் தேவாலயத்தை அடைந்தது. மக்கள் திரள் திரளாக வந்து எருசலேம் ஆலயத்தை முற்றுகையிட்டார்கள். இயேசுவும் எருசலேம் ஆலயத்துக்கு வந்தார். எருசலேம் என்னும் புனித நகரம் இயேசுவின் மனதுக்குள் இருந்த ஆன்மீக ஊற்றுகளைத் திறந்து விட்டது மோரியா மலைமீது கட்டப்பட்டிருந்த எருசலேம் தேவாலயத்தைக் கண்டதும் இயேசுவின் மனதுக்குள் சொல்ல முடியாத பரவசம் பாய்ந்தோடியது. அவர் எருசலேம் தேவாலயத்தைப் பயபக்தியுடன் பார்த்தார். அவருடைய பாதங்கள் ஆலய முற்றத்தில் பதிந்தன. ஆலயம் பெருமையடைந்தது. பாலன் எருசலேம் தேவாலயத்தைச் சுற்றி நடந்தார். தான் வந்து சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற ஒரு எண்ணம் அவருக்குள் நிழலாடியது. ஏதோ ஓர் பூர்வ ஜென்ம ஈர்ப்பு அந்த ஆலயத்தோடு தனக்கு இருப்பதாய் அவர் உணர்ந்தார். ஆலயத்தை நேசிக்கத் துவங்கினார். ஆலயத்தைச் சுற்றி நடந்தார். ஒவ்வோர் இடமாக தன் பாதங்களைப் பதித்தும், தன் கை விரல்களால் தொட்டுத் தடவியும் ஆலயத்தை தனக்குள் குறித்துக் கொண்டார்.

ஆலயத்தின் அழகு வாசலருகே வந்தார். அழகு என்பது அந்த வாசலின் பெயர். யோசேப்பும் குடும்பமும் ஆலயத்துக்குள் நுழைவதற்கான வரிப் பணத்தைச் செலுத்தி விட்டு ஆலயத்துள் நுழைந்தார்கள். எருசலேம் தேவாலயம் இருந்த யூதேயா சுதந்திர நாடாக இல்லாததால் ஆலயத்துக்குள் செலவிடுவதற்கென சீசரின் உருவம் பொறித்த நாணயம் இருந்தது. தங்களிடம் இருக்கும் வெள்ளியையோ, பொன்னையோ அந்த நாயணமாக மாற்றி தான் ஆலயத்துள் செலவிட முடியும். அந்த பணம் மாற்றுவதற்கென தனியே ஆட்கள் கடைவிரித்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் தலைமைக் குருக்களின் ஆட்களோ, அல்லது ஆளுநரின் ஆட்களோ தான். அவர்கள் பாதிக்குப் பாதி பணம் கொடுத்து கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஆலயத்துக்குள் எதற்கு பணம் தேவை ? கடவுளை வழிபட அல்லவா ஆலயத்துக்கு வருகிறோம் ?’ இயேசுவின் கேள்விக்கு யோசேப்பு விளக்கம் கொடுத்தார்.

‘ஆலயத்தில் பலியிடும் வழக்கம் இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக, வெள்ளைப் புறாக்களையோ, ஆடுகளையோ ஆலயத்தில் பலியிடுவார்கள். அப்படிப் பலியிடும் பொருட்களை ஆலயத்தில் தான் வாங்க வேண்டும். அதுவும் மிக மிக அதிக விலை கொடுத்து ! அந்த பணத்திலும் ஒரு நல்ல சதவீதம் அதை நடத்த அனுமதிக்கும் ஆலய தலைமைக் குருவுக்கோ, ஆளுநரின் ஆட்களுக்கோ தான் செல்லும். இதெல்லாம் இங்கே காலம் காலமாக நடக்கும் வழக்கம் தான். ‘

இயேசுவுக்கு யோசேப்பின் பதில் திருப்தி தரவில்லை. ஏன் ஆலயத்தில் பலியிடவேண்டும் ? ஆண்டவரின் ஆலயத்தில் மாமிசம் கருகும் வாசமும், இரத்தம் ஒழுகும் வாசமும் தேவையா ? ஏழைகள் ஏன் தங்கள் பணத்தைச் செலவிட்டு காணிக்கை செலுத்த வேண்டும் ? இதையெல்லாமா கடவுள் எதிர்பார்க்கிறார் ? முதன் முதலாக ஆலயத்தில் நுழைந்து ஆலயத்தின் நிலையைப் பார்த்த இயேசுவின் மனதுக்குள் கேள்விகள் வட்டமடித்தன.

இயேசுவின் தாயும், தந்தையும் கூட்டத்தினருடன் கலந்து விழா நிகழ்ச்சிகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட, சிறுவன் இயேசு மட்டும் தனியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
ஆலயத்தில் அன்று எங்கு பார்த்தாலும் குருக்களின் நடமாட்டம். ஏட்டுச் சுருளைக் கையில் ஏந்தி நீளமான ஆடைகள் அணிந்து உலாவிக் கொண்டிருந்தார்கள் அனைவரும். இயேசுவுக்கோ மனதுக்குள் கேள்விகள் துருதுருத்துக் கொண்டிருந்தன. இவற்றுக்கெல்லாம் சரியான விளக்கம் எங்கிருந்தேனும் வாங்க வேண்டும். எப்போதும் எருசலேம் ஆலயத்துக்கு வருவது சாத்தியமில்லை. எனவே இப்போதே யாரிடமேனும் விவாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் இயேசு ஆலயத்துள் நடந்தார்.
ஆலயத்தின் ஒரு பிரிவில் மறைநூல் அறிஞர்களும், குருக்களும் வேதநூல்களைப் பற்றியும், சட்டங்களைப்பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் வயதிலும், அனுபவத்திலும் தலை நரைத்தவர்கள். இயேசுவும் அவர்களுடைய கூட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.

அறிஞர்கள் தங்களிடையே வந்து அமர்ந்த சிறுவனை வினோதமாய்ப் பார்த்தார்கள்.

‘என்ன தம்பி, வழி தப்பி வந்துவிட்டாயா ? வெளியே போய் விளையாடு. இது பெரியவர்கள் உரையாடும் இடம்’ ஒருவர் சொன்னார்.

‘பெரியவர் என்பதை எதை வைத்து அளவிடுகிறீர்கள் ? வயதை வைத்தா ? இல்லை புரிந்து கொள்ளும் திறனை வைத்தா ? புரிந்து கொள்ளும் திறனை வைத்தென்றால் அது எனக்கு இருக்கிறது’ இயேசு சொன்னார். அவர்களால் பதில் பேச முடியவில்லை. சிறுவன் இயேசுவை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

‘எதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறாய் ? உன்னால் புரிந்து கொள்ள முடியாது’

‘உண்மை தான் சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காலங்காலமாக எல்லா இறைவாக்கினர்களும் அன்பைப் போதித்துக் கொண்டிருந்த பூமி இது. ஆனால் ஆலயத்தில் நாணயம் மாற்றுமிடத்திலும் ஏழைகள் ஏய்க்கப் படுகிறார்கள், பலிகள் இடுவதை ஆலயம் கட்டாயமாக்கியது போல் தோன்றுகிறது. புறாக்களை வெட்டவேண்டுமென்றும், ஆடுகளை பலியிட வேண்டும் என்றுமா ஆமோஸ் இறைவாக்கினரும், எரேமியா தீர்க்கத்தரிசியும் முழங்கினார்கள் ? எனக்கு இவையெல்லாம் புரியவில்லை’ இயேசு சொல்ல கூட்டம் அதிர்ச்சியடைந்தது.

பன்னிரண்டு வயதுப் பாலகனுக்கு இறைவாக்கினர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது ! ஆலய நிகழ்வுகள் பற்றித் தெரிந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கங்களுக்கு எதிராகப் பேசும் துணிச்சல் இருக்கிறது என்று வியந்தார்கள். ஆனால் அவர்களிடம் அவற்றுக்கான பதில் இல்லை.

இயேசு அத்துடன் நிற்கவில்லை. கூடி இருந்த மக்கள் கூட்டம் எல்லாம் அமைதியாய் கைகட்டி மறை நூல் அறிஞர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க இயேசு தொடந்து கேள்விகள் கேட்டார்..

‘ஏன் அந்தச் சட்டம் இருக்கிறது ? அந்தச் சட்டத்தினால் என்ன நன்மை ? அப்போதைய காலகட்டத்தில் வரையப்பட்ட சட்டங்கள் இந்த காலத்துக்குப் பொருந்துமா ?’ மறைநூல் அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் அப்படியெல்லாம் யோசித்துக் கூட பார்த்ததில்லை. எது எழுதப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருந்தவர்களால் இயேசுவின் அறிவு சார் வேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. இயேசு நிறுத்தவில்லை, எதிரே இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாகத்தை சட்டங்களைக் கிரகிப்பதில் செலவிட்டவர்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லா சட்டங்களிலும் இருந்த நியாயமின்மையைச் சுட்டிக் காட்டினார். அவர்களுடைய விவாதம் சூடு பிடித்தது. திருப்பிக் கேள்விகள் கேட்டவர்களுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமளித்தார். ஆலயத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்த இயேசு தன் தாயையும், தந்தையையும், ஊரையும் மறந்து விட்டார். உரையாடலுக்குள் மூழ்கினார்.

இயேசு ஆலயத்திலேயே தங்கி விட்ட செய்தி தெரியாத மரியாவும், யோசேப்பும், நாசரேத் ஊர் மக்களும் பாஸ்கா விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள். சிறுவன் இயேசுவும் கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து தங்களுக்கு முன்னால் சென்றிருப்பான் உணவு வேளை வரும்போது தங்களைத் தேடி வருவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. அன்று இரவுவரை இயேசு தாயைத் தேடி வரவில்லை. மரியாவின் பதட்டம் அதிகரித்தது. மறுநாள் காலையில் முதல் வேலையாக பயணிகளிடையே இயேசுவைத் தேடினார்கள். உறவினர்கள், நண்பர்கள், சிறுவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்.. அனைவரும் விசாரிக்கப் பட்டார்கள். ஆனால் யாரும் இயேசுவைப் பார்க்கவில்லை.

மரியாவின் கண்களில் கண்ணீர் வழிய மனசுக்குள் படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது. யோசேப்பு அவளைப் சமாதானப் படுத்தி எருசலேமுக்குச் சென்று தேட முடிவெடுத்தார். எருசலேமில் எங்கேனும் வழி தெரியாமல் இயேசு திணறிக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கருதினார்.

‘நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள். நாங்கள் எருசலேமுக்குத் திரும்பச் சென்று இயேசு அங்கே இருக்கிறானா என்று பார்த்து வருகிறோம். ஒருவேளை நீங்கள் அவனைக் கண்டால் வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள். ‘ பயணிகளிடம் கூறிவிட்டு யோசேப்பும், மரியாவும் எருசலேமை நோக்கி ஓடினார்கள்.

எருசலேமிற்கு வந்து எருசலேம் நகரைச் சுற்றிச் சுற்றி தேடினார்கள். விளையாட்டு திடல்கள், நதிகள், அழகிய இயற்கைக் காட்சிகள் அடங்கிய இடங்கள் எல்லா இடங்களிலும் தேடினார்கள். எங்கும் இயேசு இல்லை.

கடைசியாக எருசலேம் ஆலயத்துக்குள் நுழைந்தார்கள். ஆலயத்துக்குள் இயேசு இருப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆலயத்துக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்கள் நடுவே சிறுவன் இயேசு !

‘அது யார் ? நமது மகன் தானே ?’ மரியா ஆனந்தமாய்க் கேட்டாள்.

‘ஆம். ஆனால் இந்த பெரியவர்களின் சபையில் அவன் என்ன செய்கிறான் ?’ யோசேப்பு குழம்பினார்.

அவர்கள் கூட்டத்தை நெருங்கினார்கள். நெருங்க நெருங்க இயேசுவின் தெளிவான குரலும், அவருடைய கேள்விகளும், விளக்கங்களும் எல்லாம் பெற்றோரின் காதுகளில் விழுந்தன.

‘இவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ? இவன் இதுவரை இங்கே வந்ததேயில்லையே ?’ தந்தை வியந்தார். மரியாவோ மகனைப் பார்த்த சந்தோசத்தில் அவனை நோக்கி ஓடினாள். கட்டியணைத்து முத்தமிட்டாள்.

‘மகனே… ஏன் இப்படிச் செய்துவிட்டாய் ? எங்களைத் தனியே அலையவிட்டு விட்டாயே ? எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா ?’ மரியா ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

‘ஏன் அம்மா என்னைத் தேடினீர்கள் ?’

இயேசுவின் கேள்வி மரியாவைத் திடுக்கிட வைத்தது. சட்டென்று ஓரடி விலகினாள். முகத்தில் அழுகையும், சோர்வும், புரியாமையும் தெரிய பேசினாள்.

‘அம்மா அப்பாவை தவிக்க விட்டுவிட்டு இங்கே கூட்டத்தில் வந்து பேசிக்கொண்டிருக்கிறாயே ? வீட்டுக்குச் போக வேண்டாமா ? ‘

‘வீட்டில் தானே அம்மா நிற்கிறேன். என் தந்தையின் வீட்டில் தானே நிற்கிறேன் ! என் தந்தையின் அலுவல்களில் தானே ஈடுபட்டிருக்கிறேன் !!’ இயேசு சொன்னார். மரியா தடுமாறினாள். அவளுக்கு இயேசுவின் பதில் புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

இயேசு மரியாவின் முகத்தைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களில் வழிந்த கண்ணீர்த் துளிகளைப் பார்த்தார்.

‘வாருங்கள் அம்மா.. வீட்டுக்குப் போகலாம்’ அமைதியாய்ச் சொன்னார்.

தாய் இயேசுவை அணைத்துக் கொண்டார். அவர்கள் மூவரும் ஆலயத்தை விட்டு வெளியேறினார்கள். கூட்டத்தினர் மொத்தமும் இயேசுவையும், அவருடைய குடும்பத்தினரையும் வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் நாசரேத் நோக்கி நடக்கத் துவங்கினர். மரியாவின் மனதுக்குள் இயேசு சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. மகன் தவறிழைக்கிறானா, தான் தவறிழைக்கிறோமா அல்லது இரண்டு பேருமே சரியாய் தான் இருக்கிறோமா என சரமாரியான கேள்விகள் மரியாவுக்குள் கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டே இருந்தன.

அதன்பின் இயேசு தன் தந்தையுடன் தச்சுத் தொழில் கற்கத் துவங்கினார். வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இயேசுவின் தந்தை யோசேப்பு மறைந்தார்.

இயேசுவின் மேல் குடும்பத்தைக் காப்பாற்றும் கடமை வந்தது. தச்சுத் தொழிலைச் செய்யத் துவங்கினார். நாசரேத் நகர்வழியாகச் செல்லும் பயணிகளிடமெல்லாம் பல்வேறு விஷயங்களைப் பேசுதல் அவருடைய வழக்கமாக இருந்தது. வாழ்வியல் பற்றியும் துன்பியல் பற்றியும் சொன்ன பல்வேறு வேதங்கள், மதங்களின் அடிப்படைக் கருத்துக்களையெல்லாம் அவர் ஆர்வமுடன் அறிந்து கொண்டார். இந்தியாவின் வேதநூல்கள், சூத்திரங்கள், மஹாபாரதம் உட்பட பல்வேறு நாடுகளின் முக்கியமான நூல்களை அவர் வாசித்து வளர்ந்தார். வாழ்க்கை என்பது மாயை. கடலில் விழுந்துக் கரைந்து போகும் ஒரு துளி மழை நீர் போன்றதே வாழ்க்கை, கதிரவன் வந்து தின்று விட்டுப் போகும் பனித்துளியே வாழ்க்கை என்னும் தத்துவங்கள் அவரை வசீகரிக்கவில்லை. அவருடைய பார்வை எப்போதுமே ஏழைகளைச் சார்ந்தும், அவர்களுக்கு உள்ளன்போடு உதவி செய்யும் சிந்தனைகளைச் சார்ந்துமே இருந்தன.

எருசலேம் தேவாலயத்தில் பதினோரு வயதில் அவர் கண்ட காட்சி ஆரம்பம் என்றால் தினசரி வாழ்வில் அவர் அதன் விஸ்வரூபத்தைக் கண்டு வந்தார். சமாரியர்கள், யூதர்கள் பிரிவினையும். மக்களை மத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கச் செய்யும் மதவாதிகளின் அடக்குமுறையும். பயத்தில் விழவைக்கும் அரசியலும் அவரை மிகவும் பாதித்தன. இவற்றுக்கு எதிராக தன்னுடைய குரல் உயரவேண்டும் என்றும். தன்னுடைய வாழ்வின் அர்த்தமே சமுதாய அடித்தட்டு மக்களின் மனதில் ஏற்படக் கூடிய மறுமலர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது என்பதும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாய் இருந்தது.

அவருடைய பணிவாழ்வின் அடிப்படை புரட்சி செய்து அரசைப் பிடிப்பதில் இருக்கவில்லை. தெளிவான சிந்தனையை அவர் வகுத்துக் கொண்டார். மாற்றம் என்பது மனங்களில் வருவது. போர்க்களத்தில் பெறப்படுவதல்ல. மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும், வாய்ப்பையும் வழங்க வேண்டும். உண்மை உணரும் மக்கள் தங்கள் அடிமைத்தனங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். போதனையின் முக்கிய இரண்டு அம்சமே கடவுளை நேசி, மனிதனை நேசி என்பதாக இருக்கவேண்டும் என்று தனக்குள் தெளிந்த சிந்தனைகளை எழுதிக் கொண்டார். தன்னளவில் தெளிவற்ற மனிதன் பிறரைத் தெளிய வைத்தல் சாத்தியமில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.

பன்னிரண்டு வயது முதல் பதினெட்டு ஆண்டுகள் தச்சுத் தொழிலிலும், உலகைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டிய அவருடைய தனி வாழ்க்கை, முப்பதாவது வயதுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் இயேசுவின் தந்தை யோசேப்பு மறைந்து விட்டிருந்தார். தன்னுடைய பணி உளிகளைக் கொண்டு மரங்களைச் செதுக்குவதல்ல, சிந்தனைகளைக் கொண்டு மனங்களைச் செதுக்குவது என்று தனது முப்பதாவது வயதில் முடிவெடுத்தார் இயேசு. அன்னையையும், தொழிலையும் வீட்டிலேயே விட்டு விட்டு வீதிக்கு வந்தார் !

அதே நேரத்தில் எருசலேமில் ஒரு சலசலப்பு. யோவான் என்னும் மனிதர் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். மக்களை தங்கள் பாவ வழிகளை விட்டு விலகி நீதியான பாதைக்கு வர அழைப்பு விடுக்கிறார். விரைவில் மீட்பர் வரப்போகிறார் என்று முழங்குகிறார். இயேசுவின் காதுகளில் அந்த செய்தி விழுந்தது. அவரைச் சந்தித்து தன்னுடைய பணி வாழ்வை ஆரம்பிப்பதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்த இயேசு யோவானைத் தேடிப் புறப்பட்டார்.

மக்கள் கூட்டம் யோவானை மொய்க்கத் துவங்கியது. கூட்டம் கூட்டமாக மக்கள் அவரிடம் வந்து தண்ணீரில் மூழ்கி யோவானின் குழுவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அந்த யோவான் இயேசுவின் உறவினர் !

One thought on “இயேசு வரலாறு 5 : இளமையில் இயேசு

  1. இயேசு ஒரு நல்ல மனிதர் எனக்கு அவர ரேம்ப பிடிக்கும்
    அவர எனக்கு ஏன் பிடிக்கும் என்டு எனக்க தெரியாது அனா அவர எனக்கு சின்ன வயதிலே பிடிக்கும் நான் ஒரு முஸ்லிம் என்ட பெயர் நௌபான்

    Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...