Posted in Life of JESUS

இயேசு வரலாறு 6 : பாலைவனத்தில் கூக்குரல்

Image result for John the baptist in desert

அது போந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்த காலம். அன்னா, கயபா இருவரும் மிகவும் செல்வாக்குடைய தலைமைக் குருக்களாக இருந்தார்கள். யூதேயா ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது, ரோமப் பேரரசை அப்போது திபேரியு சீசர் அரசாண்டு வந்தார்.

ஆலயக் குருக்களாகப் பணியாற்றிவந்த செகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் வயதான காலத்தில் கடவுளின் அருளினால் பிறந்தவர் தான் இந்த யோவான். அவர் ஒட்டக ரோமத்தினால் ஆன ஆடையை அணிந்து கொண்டு, தோல் கச்சையினால் இடையை வரிந்து கட்டிக் கொண்டு வெட்டுக்கிளிகளையும், காட்டுத் தேனையும் உண்டு வந்தார். அவருடைய பணி கடவுளுக்கான வழியில் மக்களைச் செலுத்துவதே.

அவர் யோர்தான் நதிக்கரையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றித் திரிந்து உரத்த குரலில் ‘மனம் திரும்புங்கள். நீங்கள் செல்லும் வழி கோணலானது. கடவுளுக்கான வழியில் திரும்புங்கள். அதற்கு அடையாளமாக இந்த யோர்தான் நதியில் மூழ்கி எழுங்கள். இது தான் நீங்கள் மனம் திரும்பியதற்கான அடையாளம். என்னிடம் வாருங்கள் உங்களுக்கு நான் திருமுழுக்கு செய்து வைக்கிறேன்’ என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

அவருடைய துணிச்சல் அசாத்தியமானது. அவருடைய எச்சரிக்கை சாதாரண மக்களையும் அவர்களுடைய தவறான பாதையையும் நோக்கி மட்டும் இருக்கவில்லை. யூதேயாவின் ஆளுளர் போந்தியு பிலாத்துவையும் எச்சரித்தார், ஏரோது மன்னனின் மகனை நோக்கியும் எச்சரிக்கை வீசினார், ரோமப் பேரரசர் சீசரை நோக்கியும் எச்சரிக்கை விடுத்தார். அவருடைய எச்சரிக்கைக்கு போலித்தனமான மதத் தலைவர்கள் யாருமே தப்பவில்லை.

யோர்தான் நதி பல சரித்திர முக்கியத்துவங்களைக் கொண்டது. இந்த யோர்தான் நதியில் மூழ்கச் செய்து தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எலிசா என்னும் தீர்க்கத் தரிசி படைவீரன் ஒருவனின் தொழுநோயைக் குணமாக்கியிருந்தார். இந்த யோர்தான் நதி தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரயேல் மக்கள் நடந்தபோது தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் விலகிக் கொள்ள பாதை அமைத்துக் கொடுத்தது. அதே யோர்தான் நதியில் இப்போது யோவான் திருமுழுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

சிலர் அவரைப் பைத்தியக் காரனாகப் பார்த்தார்கள். தலைமைக் குருக்களும், மறை நூல் அறிஞர்களும் அவரைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஏழை எளிய மக்களும், கடவுளின் மேல் பக்தியும் , பயமும் கொண்டிருந்த மக்களும் யோவானிடம் சென்று திருமுழுக்குப் பெற்றார்கள். யோவானின் பெயர் நகரம் முழுவதும் பரவியது. அவரிடம் வரும் மக்களின் கூட்டமும் அதிகரித்தது.

தங்களை விட நீதிமான்கள் யாருமே இல்லை என்று ஆணவத்தில் நடந்த பரிசேயர்களும், நாத்திகர்களான சதுசேயரும் கூட யோவானிடம் வரத் துவங்கினர். அவர்களைக் கண்ட யோவான் ஆச்சரியமடைந்தார்.

‘விரியன் பாம்புக் குட்டிகளே ! கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்கும் வழியை நீங்கள் கண்டு கொண்டீர்களே ! வாருங்கள். திருமுழுக்குப் பெறுங்கள். திருமுழுக்கு என்பது வெறும் ஆரம்பம் தான். நீங்கள் உங்கள் தீய வழிகளை விட்டு விட்டு நீதியோடும், நியாயத்தோடும் நடக்க வேண்டும். அது தான் கடவுளுக்குப் பிடித்தமானது’ யோவான் குரலுயர்த்திச் சொன்னார்.

‘நீர் தான் கடவுள் அனுப்பிய இறைவாக்கினரா ?’

‘நான் கடவுளின் இறைவாக்கினர் அல்ல. கடவுளின் வருகையை ஆயத்தம் செய்ய வந்திருப்பவன்’ யோவான் சொன்னார்.

‘கடவுளின் வழியை ஆயத்தம் செய்யவா ? அப்படியானால் இன்னொருவர் வருவாரா ?’

‘ஆம்.. எனக்குப் பின்னால் ஒருவர் வருவார். அவருடைய காலணிகளைத் தொடும் தகுதி கூட எனக்கில்லை’

‘அவர் எங்கள் முற்பிதா ஆபிரகாமை விடப் பெரியவரா ?’

‘மூடர்களே. கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்து கூட ஆபிரகாமுக்குச் சந்ததிகள் தோன்றச் செய்வார். எனவே கடவுளின் அருள் பெற்ற ஆபிரகாமை வணங்குவதை விடுத்து, அவருக்கு அந்த அருளைக் கொடுத்தக் கடவுளை வணங்குங்கள். கடவுளின் உண்மையான மகன் இனிமேல் தான் வரப் போகிறார்.’

‘அவர் யார் ? எப்போது வருவார்’ வந்திருந்தவர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்கள்.

‘அவர் ஒளி. நான் ஒளிக்குச் சான்று பகர வந்தவன். அவர் வரும்போது நீங்கள் அவரை அறிந்து கொள்வீர்கள்’ யோவான் சொன்னார்.

‘நாங்கள் செய்ய வேண்டியது என்ன ?’

‘ஏற்கனவே மரத்தின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும். எனவே நல்ல கனி தரும் நல்ல மரங்களாய் வாழுங்கள்’ யோவான் சொன்னார்.

‘எங்களுக்குப் புரியவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்’ மக்கள் பணித்தார்கள்.

‘நல்ல கனி என்பது நல்ல செயல்கள். உங்களிடையே பணக்காரரும் இருக்கிறீர்கள் வறியவர்களும் இருக்கிறீர்கள். பணக்காரர் பணக்காரரோடும், ஏழைகள் ஏழைகளோடும் மட்டுமே சகவாசம் செய்கிறீர்கள். இது நல்லதல்ல. உங்களில் இரண்டு அங்கி வைத்திருப்பவர்கள் அதில் ஒன்றை அங்கியே இல்லாதவனுக்குக் கொடுங்கள். சுவையான உணவை உண்டு வாழ்பவர்கள், தேவையான உணவு கூட இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்தலே உன்னதநிலை’ யோவான் விளக்கினார்.

யோவானின் பெயர் எங்கும் பரவிவிட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் திருமுழுக்குப் பெறத் துவங்கினார்கள். பல்வேறு பணி செய்பவர்களும் அவரிடம் வந்து தாங்கள் செய்யவேண்டியது என்ன என்று அவரிடம் கேட்கத் துவங்கினார்கள்.

வரி வசூலிப்பவர்கள் அவரிடம் வந்து,’ போதகரே.. நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ என்று கேட்டார்கள்.

‘நீங்கள் வரி வசூலிப்பவர்கள். உங்கள் பணியை நேர்மையுடன் செய்யுங்கள். குறிப்பிட்ட வரிக்கு மேலாக வசூலிக்காதீர்கள்.’ என்றார்.

படைவீரர்கள் அவரிடம் வந்தார்கள். ‘போதகரே எங்களுக்கும் அறிவுரை வழங்குங்கள்’

‘நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். யாரையும் மிரட்டிப் பணம் பறிக்காதீர்கள். வலிமையும், அதிகாரமும் இருக்கிறது என்ற காரணத்தினால் ஏழைகளை வாட்டாதீர்கள். கிடைக்கும் ஊதியமே போதும் என்றிருங்கள்’ என்றார்.

யோவானுடைய உறுதியான போதனைகளையும், தெளிவான வார்த்தைகளையும் கேட்ட மக்கள் இவர் தான் கடவுளிடமிருந்து வந்திருக்கும் மீட்பர் கிறிஸ்து என்று நினைத்தார்கள். எனவே மீண்டும் மக்கள் அவரிடம் சென்று,

‘போதகரே.. நீர்தான் மீட்பரா ?’ என்று கேட்டார்கள்.

‘இல்லை. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லிவிட்டேன். நான் கிறிஸ்துவுமல்ல, இறைவாக்கினருமல்ல, கடவுளின் வழியை ஆயத்தம் செய்யும் ஒரு குரல் நான். நான் நீரினால் தரும் திருமுழுக்கை எனக்குப் பின் வருபவர் தூய ஆவி என்னும் நெருப்பினால் தரும் வல்லமை படைத்தவர். தூற்றுக் கூடை அவருடைய கைகளில் இருக்கிறது. அவர் அதைக் கொண்டு கோதுமையையும், பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைக் களஞ்சியத்திலும், பதரை நெருப்பிலும் போட்டுச் சுட்டெரிப்பார்’ என்றார்.

யோவான், இயேசுவை விட ஆறு மாதம் முன்னால் பிறந்தவர். யோவான் கருவுற்றிருக்கும் போதே இயேசுவின் தாய் யோவானின் சிறப்பை அறிந்து கொண்டு அவருடைய தாய் எலிசபெத்தைச் சென்று வாழ்த்தியிருந்தார். யோவானின் திருமுழுக்குப் பணி மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இயேசுவிற்கு அப்போது வயது முப்பது.

தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை இயேசு உணர்ந்தார். அவர் நேராக யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோர்தான் நதிக்குச் சென்றார். யோவான் நதியில் நின்று மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இயேசு அவருக்கு முன்னால் வந்து நின்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்தார். திடுக்கிட்டார். தன் உறவினர் இயேசுவை யோவான் நீண்ட பல வருடங்களுக்குப் பின் இப்போது தான் பார்க்கிறார். இயேசுவின் பிறப்பைப் பற்றி தாய் எலிசபெத் மூலமாக கேட்டு அறிந்திருந்தார் யோவான். இயேசுவையும் அவருடைய தெளிவான முகத்தையும், தீர்க்கமான கண்களையும் கண்ட அவருக்குள் பரவச நதி பாய்ந்தோடியது. இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்க யோவான் தயங்கினார்.

‘எனக்கு திருமுழுக்கு வழங்குங்கள். மக்களை வழிநடத்த வேண்டிய நான் திருமுழுக்குப் பெறாமல் இருப்பது நீதியல்ல. கடவுளுக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். அதற்கு என்னை அனுமதியுங்கள்’ இயேசு புன்னகைத்தார்.

யோவான் தடுமாறினார். ‘ உமக்கே திருமுழுக்குத் தரும் பெருமையை எனக்குத் தந்தீரே !…’ என்று தழுதழுத்தார்.

அப்போதே இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

இயேசு யோர்தானை விட்டுக் கரையேறினார். யோர்தான் ஆற்றைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. இயேசு நதியை விட்டுக் கரையேறுவதையே யோவான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென வானத்தில் மேகங்கள் விலகின. ஒரு பெரிய விரிசல் வானத்தில் தோன்றுவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடவுளின் தூய ஆவியானவர் ஒரு புறாவின் வடிவில் இறங்கி இயேசுவுக்குள் கலந்தார். மக்கள் பயத்துடனும், திகைப்புடனும், வியப்புடனும் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விரிசல் விழுந்த வானத்திலிருந்து கடவுளின் குரல் ஒலித்தது. ‘இவரே என் அன்பார்ந்த மகன். இவரில் நான் பூரிப்படைகிறேன்’.
கடவுளின் குரலைக் கேட்ட மக்கள் பரவசமடைந்தார்கள்.

இயேசுவின் பணிவாழ்வு அங்கே ஆரம்பமானது. இயேசுவின் பணிவாழ்வுக்கான வருகையைக் கண்டபின் யோவான் இன்னும் அதிக உற்சாகத்துடன் போதிக்கத் துவங்கினார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...