ஒருவன்
ஒரு தீக்குச்சி,
செய்யும்
சிறு தவறு
பிழையற்ற கானகத்தைப்
பொசுக்கி முடிக்கிறது.
தாவீதின்
பிழை
எழுபதாயிரம் பேரின்
மரணத்துக்கு
முன்னுரை எழுதியது.
ஏரோதின்
பிழை
எண்ணற்ற குழந்தைகளின்
புன்னகையை
அழுகையாய் மாற்றியது.
ஆபிரகாமின்
பிழை
தவறான சந்ததியை
பூமிக்கு அறிமுகம் செய்தது.
ஒரு மீட்பர் செய்யும்
பெரும் தியாகம்
பொசுங்கிய வாழ்வை
மீண்டும் புதுப்பிக்கிறது.
இயேசுவின் வருகை
ஒற்றை
விளக்கில்
அத்தனை இருட்டையும்
அடக்கும் முயற்சி.
ஒற்றை
சிப்பியில்
அத்தனை ஆழிகளையும்
நிறைக்கும் முயற்சி.
ஒற்றை
ஜீவனில்
அத்தனை மரணங்களையும்
முறிக்கும் முயற்சி.
இது
பிழையற்ற ஒருவர்
பிழையாய்
உருமாறிய தருணம்.
பாவமற்ற ஒருவர்
பாவத்தின் வடிவான
தருணம்.
ஒருவரால்
மனுக்குலம்
மீட்பின் வாசல் நுழைந்த
அனுபவம்.
நாமும்
ஒருவன் தான்.
கானகம் அழிக்கிறோமா
வானகம் அழைக்கிறோமா ?
*
சேவியர்